Wednesday, November 11, 2009

பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவு

பொதுமக்கள் உதவி நிலையமொன்று நேற்று முன்தினம் பொலிஸ் தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபர் மஹிந்த பால சூரிய இந்த நிலையத்தைத் திறந்து வைத்தார்.

சிநேகபூர்வமான முறையில் பொதுமக்களுக்குச் சிறந்த சேவையாற்றுவது இந் நிலையத்தின் பிரதான பணியாக இருக்கும். பொது மக்களுக்கும் பொலிஸாருக்கு மிடையே நல்லுறவை வளர்க்கும் திட்டத்தின் ஒரு அம்சமாகவே பொதுமக்கள் உதவி நிலையத்தை ஆரம்பித்ததாகப் பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நல்லுறவு நிலவ வேண்டியது ஒரு அத்தியாவசிய தேவை. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி நிரந்தர அமைதிக்கு வழிவகுப்பதற்கு இந்த நல்லுறவு அவசியமானது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்திலேயே சட்டமும் ஒழுங்கும் சரியான முறையில் பேணப்படும்.

இந்த ஒத்துழைப்புக்கு அத்தியாவசியமானது நல்லுறவு. ஆனால் நல்லுறவு இதுவரையில் திருப்திப்படக்கூடிய அளவுக்கு இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

பொலிஸாருடன் பொதுமக்களுக்கு நல்லுறவு ஏற்படாதிருப்பதில் பொலிஸாரின் பங்கு முக்கியமானது. அவர்களின் செயற்பாடுகளிலும் பார்க்கக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களே பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தோற்று விக்கின்றன.

இவ்விடயத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகள் கவனமெடுப்பது சாதகமான பலனைத் தரும். ஏதேனுமொரு தேவைக்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் மக்கள் அச்ச உணர்வு இல்லாது செல்லும் நிலை உருவாகுவதே நிஜமான நல்லுறவு.

கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் தற்காலிகக் குடியிருப்பாளர்களாகக் கணிசமான எண்ணிக்கையில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

இவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே அடிக்கடி தொடர்புகள் இருப்ப தற்கான காரணிகள் உள்ளன. குடியிருப்புகளில் பொலிஸார் அடிக்கடி மேற்கொள்ளும் சோதனைகள் ஒரு காரணி. தற்காலிக குடியிருப்பாளர்களைப் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை இன்னொரு காரணி.

குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் பெரும்பாலும் நியாயமானவையாகவும் நாகரிகமானவையாகவும் இருப்பதால் மக்களுக்கு அதனால் பாதிப்பு இல்லை. பொலிஸ் பதிவு முறை மக்களுக்குச் சில சிரமங்களை ஏற்படுத்துகின்றது.

பதிவு செய்யச் செல்லும் போது வீட்டுச் சொந்தக்காரரின் பிரசன்னமும் அவசியம் என்று பொலிஸ் நிலையங்களில் கூறுகின்றார்கள். வீட்டுச் சொந்தக்காரரும் வாடகைக் குடியிருப்பாளரும் ஒரே வீட்டில் இருப்பவர்களாயின் இது சாத்தியம்.

பெரும்பாலான வீடுகளில் வாடகைக் குடியிருப்பாளர்களே வசிக்கின்றனர். வீட்டுச் சொந்தக்காரர்கள் தூர இடங்களில் வசிப்பவர்களாக இருப்பர்.

சிலர் தங்கள் வீடுகளை வாடகைக்குக் கொடுத்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இப்படியான குடியிருப்பாளர்கள் வீட்டுச் சொந்தக்காரரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை. ஆனால் வீட்டுச் சொந்தக்காரர் வரவேண்டும் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவு ஏற்படுவதற்குத் தடையான காரணியாக இதைப் பார்க்கலாம். பொலிஸ் மா அதிபர் இவ்விடயத்தைக் கவனத்துக்கு எடுக்க வேண்டும்.

அவசர காலச் சட்டத்தின் உறுப்புரை 23ன் கீழ் பொலிஸ் பதிவுக்காக விநியோகிக்கப்பட்டுள்ள படிவத்தில் பிரதான குடியிருப்பாளர் என்றே காணப்படுகின்றது. இப்பதத்துக்குப் பொலிஸார் வீட்டுச் சொந்தக்காரர் என்று வியாக்கியானம் அளிக்கின்றனர்.

இது பிழையான வியாக்கியானம். வீட்டில் குடியிருப்பவர்களில் பிரதானமானவரே பிரதான குடியிருப்பாளர். இவ்விடயத்தைப் பொலிஸ் தலைமையகம் எல்லாப் பொலிஸ் நிலையங்களுக்கும் தெளிவுபடுத்துமேயானால் பிரச்சினை இருக்காது.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com