Saturday, November 28, 2009

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்த விசேட உயர்மட்டக்குழு.

30 வருடகால யுத்தத்தின் காரணமாக வடக்கில் நிலைகுலைந்திருக்கும் நீதி ஒழுங்கு முறைகளை மீண்டும் அங்கு செயல்படுத்தவென அதியுயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவினால்
நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது வடக்கில் சட்டம் ஒழுங்கு எங்கே மீறப்படுகின்றது, அதற்கு காரணிகள் யாது என கண்டறிந்து அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதுடன், நீதியையும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான அதிகாரிகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு நியமிப்பதுடன் தேவை ஏற்படின் அவ் அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பான பயிற்சிகளையும் வழங்குவர். அத்துடன் மக்களுக்கும் , மாணவர்களுக்கும் சட்டம் ஒழுங்கு தொடர்பான போதிய அறிவுறுத்தல் வழங்கவும் முயற்சிகளை மேற்கொள்வர்.

இக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. சிறிபவான் அவர்களும், உறுப்பினர்களாக நீதி அமைச்சின் செயலர் திரு. சுதத் கமலத், அரசியல் யாப்பு அமைச்சின் செயலர் திருமதி மல்காந்தி விக்ரமசிங்க, நீதி அமைச்சின் சட்ட விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் திருமதி. கமலினி டீ சில்வா, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிற்றர் ஜெனரல் திரு. ஞானதாசன், சிறைச்சாலைகள் ஆணையாளர் திரு. சில்வா யாழ் மாவட்ட செயலர் திரு. கணேஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமாணத்தில் இயங்குகின்ற தமிழ் ஆயுதக் குழவொன்று அரச நிர்வாகத்தினுள் தலையீடுகளைச் செய்வதை இக்குழு கட்டுப்படுத்தும் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment