Saturday, November 21, 2009

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதில் சிக்கல்.

எதிர்வரும் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு பாடசாலை ஊடாக தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள் தத்தமது பாடசாலை ஊடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள போதிலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் மீளவும் பாடசாலைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகிழக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் கொண்டுள்ள மாணவர்கள் அதனை குறித்தப் பிரதேசத்தின் கிராமசேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தி அக்கடிதத்தையும் அதனுடன் இணைத்து அனுப்புமாறு கோரப்படுகின்றனர்.

அதேவேளை பாடசாலையூடாக, விண்ணப்பிக்கும் மாணவர் ஒருவர் குறித்த பாடசாலையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கல்வி கற்கும் பட்சத்தில் பாடசாலை அதிபரின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பித்து தமக்குரிய தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியுமென இது தொடர்பான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை கவனத்திற் கொள்ளப்படாது குறித்த விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த.(சா/த) பரீட்சை நெருங்கிவரும் நிலையில், எவ்வாறு வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று கிராமசேவகர்களிடம் தமது நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதென மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பலர் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்திலிருந்தும் இடம்பெயர்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கொழும்பிலேயே வசித்து வருவதாகவும், இந்நிலையில் மீண்டும் வட பகுதிக்குச் சென்று தமது பகுதி கிராமசேவகர்களிடம் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வது கடினமான காரியமெனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, சுற்றறிக்கைக்கு ஏற்ப பாடசாலை அதிபர்கள் உறுதி செய்யும் பட்சத்தில் தமக்கு தேசிய அடையாள அட்டையை வழங்க ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுகின்றனர்.

அதேவேளை, தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தனது பதிவை உறுதிப்படுத்தவேண்டும். வெளிமாவட்டங்களில் தற்காலிமாக வாழ்வோர் அம்மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பதாயின் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள கிராம சேவகரூடாக, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் உறுதிப்படுத்தியதன் பின்னரே அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வீரகேசரி இணையம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com