Sunday, November 8, 2009

எதிர்கட்சித் தலைவர் இந்தியா செல்கின்றார்.

மெய்ப்பாதுகாவல்களை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாகவும் அவர் தனது மெய்பாதுகாவலர்களை அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் கட்சியின் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த தனது மெய்ப்பாதுகாவலர்களை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளபோதும், நடைமுறைகளில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது வரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்கு எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தபோதும், அது பலனளிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் ஆர்கே நாராயணன், வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் லால் கிருஸ்ணா அத்வானி உட்பட பல முக்கியஸ்த்தர்களை எதிர்கட்சித் தலைவர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com