Monday, November 9, 2009

வெற்றிவாகை சூடப்போவது யார்? -கிழக்கான் ஆதம்-

தற்போதைய சூழலில் இலங்கையில் மிகவும் பிரச்சாரப்படுத்தப்பட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தொடர்பாக பல புலம்பெயர் மக்களும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. உண்மையில் இது இலங்கையில் அவர்களின் கைகளை உயர்தப்போகும் பாமர மக்களின் பார்வையில் எப்படியுள்ளது என்பதே இந்தக் கட்டுரை

“பாமரமக்கள்” இலங்கைத் தீவில் காலாகலமாக சிறிய சுனாமிக்கும் பெரிய சுனாமிக்கும் முகம் கொடுத்து சித்திரவதைப்பட்டாலும் ஓடி ஒழிந்து கொள்ளாமல் மீண்டும் துளிர்த்துக் கொண்டிருக்கும் போதி மரங்கள் அவர்கள் அவர்களின் உண்ர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டாமோ?

தனக்கு பிறந்த மகளுக்கு முடியிறக்கியபோது ஆரம்பித்த சனியன், கொடூரம் தனது பேத்தியின் திருமணத் திகதிக்கு முடிவுற்றிருக்கிறது. இத்தனை கால இடைவெளியில் இழந்ததையும், இல்லாமல் போனவற்றையும் மறந்து போயிருக்கிறார்கள் அந்த மக்கள் காரணம் ஞாபகம் வைத்துக்கொள்ள கூடிய அளவில் அவை இருக்கவில்லை அதைவிட எத்தனையோ GBக்கள் அவை அதிகமானவை. எனவே ஹிரோ போன்றிருந்த அவர்கள் பிச்சைக்காரனின் உருவத்திலும், எதியோப்பிய ஏழைகளின் உடல் பலத்திலும் அந்த மகா அலெக்ஸேன்டரின் மனபலத்திலும் உள்ளனர்.

இழந்தவற்றை மீட்க முயற்சிப்பது புத்திசாலித்தனமல்ல! என்பது அவர்களுக்கு வாழ்கை கொடுத்த பாடம் இனி அதற்கு தேவையான ஆயுலும் அவர்களிடம் இல்லை. எனவே இனி இருப்பதை காப்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது.

அரசியல்வாதியைக் கண்டால் ஒதுங்கி நடக்கிறார்கள், அநியாயக் காரர்களைக் கண்டால் உமிழ்ந்து விடுகிறார்கள், ஹிரோயிஷமும், கோஷங்களும், விடுதலைப் பாடல்களையும் கண்டால் அவர்கள் ஒரு கும்பிடு போட்டுவிடுகிறார்கள். அவர்களின் தேவை பசித்த வயிற்றுக்கு ஒரு நேரமாவது சோறு, மிஞ்சியிருக்கும் குஞ்சுகளின் எதிர்காலத்திற்கான கல்வியும் வழிகாட்டுதலும் அவ்வளவுதான்.

அவர்கள் மட்டும் எழுத்தாளர்களாக இருந்திருந்தால் உலகத்தில் அதிகம் விற்பனையாகும் நாவல் அவர்களுடையதாக இருக்கும், டைரக்கடராக இருந்திருந்தால் ஒவ்வொறு வருட ஒஸ்கார் அகடமி அவாடுகளும் இலங்கைக்கு வெளியே பல ஆண்டுகளுக்கு செல்லாது, அவர்கள் ஐ.நாவில் இருந்திருந்தால் உலக முழுமையிலும் சமாதானத்தைத் தவிர எதுவும் இருக்காது. அவ்வளவு முதிர்ச்சியும் அனுபவமும் அவர்கள் அடைந்திருக்கிறார்கள் குட்டுப்பட்டு கற்றவையல்ல அவை காசிக்கு விற்க. வெட்டுப்பட்டு, சுடப்பட்டு, சொந்தத்தை இழந்து, கணவனை இழந்து, தாயை இழந்து, தந்தையை இழந்து, தடை முகாமிலிருந்து கற்றவை. எனவே இலகுவாக அவர்கள் யாரையும் நம்பத் தயாராகவில்லை என்பதே உண்மை.

இன்னும் சரியாகச் சொல்வதானால் உலகில் “சைபர் வேல்ட்” “ரியல் வேல்ட” என்று இரண்டு உலகம் உண்டு என்று கம்பியூட்டர் காரர்கள் சொல்வதைப் போல, “புலம் பெயர் தமிழர் உலகம்” “இலங்தை தமிழர் உலகம்” என இரண்டு உண்டு இதில் புலம் பெயர் தமிழர்களின் உலகத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் உலகிற்கும் இடையில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூர வித்தியாசமுண்டு.

இதில் முன்னயவர்கள் கற்பனையை கதையாக்குகின்றவர்கள், பின்னயவர்கள் வாழ்கையை கதையாக்குபவர்கள் எனவே கமேஸியலாக கற்பனைக்கு வரவேற்ப்பு அதிகம் என்றாலும் அவை வாழ்கைக்கு உதவாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கையில் அமைக்கப்படுகின்ற ஆளும் அரசுக்கு எதிரான அரசியல் கூட்டணி தொடர்பில் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கையில் கஸ்டப்படாமல் வாழும் மேல் வர்கத்தாலும் அதிகம் அலசப்பட்டாலும் அதனை வெற்றி அல்லது தோல்வியடையச் செய்யும் உயிர் சக்திகளாக உள்ள பாமர மக்களின் மத்தியில் எந்த பரபரப்பையும் அல்லது நம்பிக்கையையும் காணமுடியவில்லை.

காரணம் வட்டுக் கோட்டை தீர்மாணம் முதல் ஒரு நாட்டுக்குள் தீர்வு என்ற கோஷம் வரை பலதரப்பட்ட அரசியல் தீர்க்கதரிசிகளின் நிஜ, நிழல் உருவங்களைப் பார்த்தவர்கள். தன்னால் முடியாது என்று பாயில் தான் படுக்கும் வேளையில் தன் பிள்ளை சோற்றுக்காக அழுவதை தினம் கேட்பவர்கள் எனவே அவர்களிடம் எந்த அரசியல் சாணக்கியமும் இனி பலிக்கும் என்று எதிர்பார்ப்பது தப்பு.

தற்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்கள் ஆனாலும் சரியே அல்லது தற்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டணியானாலும் சரியே இவர்கள் யார்? மக்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும் போதெல்லாம் இவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர்? எங்கெல்லாம் ஓடி ஒழிந்து கொண்டனர் ? என்பதையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அறிந்தவர்கள்.

அவர்களின் பாஷையில் எழுதுவதானால் பொல்லைக் கொடுத்து அடியும் வாங்கியவர்கள் மக்கள். ஆட்சியதிகாரத்தை கொடுத்து கட்டியிருந்த கோவணத்தையும் இழந்தவர்கள் எனவே இவர்கள் யார் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள எதிரணி அரசியல் கூட்டணியை நோக்குவோமாயின் அதில் இடம்பெற்றுள்ள தமிழர் கட்சிகளின்மீது சாதாரண பொது மக்களுக்கு அதிக அதிருப்திகள் உள்ளதை காண முடிகிறது. அதில் பிரதான குற்றச் சாட்டாக மக்கள் வைப்பது இவர்கள் தங்களின் ஒற்றுமையை மக்களுக்கு அவசியமான மற்றும் மக்களை காக்க வேண்டிய நேரங்களில் எல்லாம் பிரிந்து செயற்பட்டு விட்டு இன்று ஓரளவு மக்கள் சாதாரண வாழ்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத நேரத்தில் கூட்டணி சேர்ந்திருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

நீங்கள் கேட்கலாம்!. இதுதானே மிகவும் முக்கியிமான தருணம் இப்போது கூட்டணி சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுவது சரியானதுதானே என்று? இல்லை மக்களின் பார்வையில் அவர்களுக்கு அவர்களின் உயிர்களை விட இது முக்கியமான தருணமாகத் தெரியவில்லை. இந்தக் கூட்டணி சில வருடங்களுக்கு முன்னர் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினையை ஒன்றாக சர்வதேசத்திடம் முன்வைத்திருந்தால் இன்று அவர்கள் இழந்தது எல்லாம் இல்லாமல் இருந்திருக்குமே! எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்குமே! எவ்வளவோ அனாதைகள் குடுப்பத்துடன் வாழ்ந்திருக்குமே! எவ்வளவோ விதவைகள் சுமங்கலியாக இருந்திருப்பார்களே! எத்தனையோ அங்கவீனர்கள் முழு மனிதர்களாக உலாவியிருப்பார்களே! கண்கெட்ட பின் எதற்கு சூரிய நமஸ்காரம்.

இதற்கு முன்னர் இவர்கள் பல கூட்டணிகள் இயக்கங்களிலும் இருந்தபோது ஒவ்வொரு தடவையும் இனித் திருந்திவிடுவார்கள் என்றுதானே அவர்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் அனுப்பியிருந்தனர். அப்போதெல்லாம் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையைத் தவிர எதையும் மக்கள் காணமுடியவில்லை.

தமிழர்களுக்கு மிகவும் இக்கட்டான காலகட்டமான யுத்தக்காலத்தில் கூட காத்திரமான எந்த நடவடிக்கையையோ அல்லது இவர்களுக்குள் ஒரு பொது நன்மைக்காக ஒற்றுமையையோ பேணமுடியாதவர்களா? இனி வரும் காலத்தில் ஒற்றுமையாக செயற்படப் போகிறார்கள் என ஒரு கேள்வி மக்களின் இதயங்களில் தொற்கி நிற்கிறது.

தற்போது இலங்கையில் எதிர்கட்சிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்பாக தமிழர்கள் மத்தியில் அதிக மனவருத்தங்கள் அவர்களின் மனங்களில் அசைக்கமுடியாமல் உள்ளது. இதனை கழுவுவது தற்போதைக்கு மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது. என்பதுடன் இவர்கள் ஒவ்வொருவர் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

அரசனை நம்பி மக்கள் புருஷனை கைவிட்ட கதைகள் தமிழர்கள் வாழ்கையில் ஏற்கனவே பல துன்ப துயரங்களை தந்துவிட்டன. தற்போது அவ்வளவு அவசரப்பட்டு தமிழர்கள் கைவிட முற்பட மாட்டார்கள். அத்துடன் தற்போதைய அரசினால் பகிரங்கமாக முன்னெடுக்கப்படும் பல புத்த மதத்தை புகுத்தும் பாணியிலான செயல்கள் தமிழர்களிடம் முகம் சுழிக்கச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும் ஆட்சியிலுள்ள அரசு நாடு நலன் சார்ந்த விடயங்களில் மிகவும் துணிச்சலாகவே செயற்படுவதை காணமுடிகிறது. எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இலங்கையர் என்பதை வளர்ச்சி அடைந்த நாடுகளின் தரத்திற்கே காட்டுவது படித்தவர்கள் மற்றும் பாமரர்கள் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதாரிகளையும், கள்வர்களையும், அடாவடித்தனம் புரிபவர்களையும் அரசு கையாளும் முறையையும் ஈவிரக்கமின்றி பகிரங்கமாக அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதையும் பொது மக்கள் நேரடியாக ஆதரிக்கின்றனர்.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது இது அடை மழைக்காலம் என்பதால் அரிசியை உற்பத்தியாளர்களிடம் வாங்கி அதனை பதுக்கும் பணியில் பல கொழுத்த பண முதலைகள் ஈடுபட்டிருந்தன. இந்த செயல் அதிகமாக இலங்கையின் நெல் உற்பத்தியில் 25% தரும் கிழக்கில் அதிகமாகவே இருந்தது என்றாலும் நெல்லைப் பதுக்கி செயற்கைத் தட்டுப்பாட்டை அரிசிக்கு ஏற்படுத்தினால் குறைந்த விலையில் அரிசி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்ற அரசின் அதிரடி அறிவிப்பினால் விலை ஏறிச் சென்ற அரிசி தற்போது விலை வீழ்சியடைய ஆரம்பித்துள்ளது. கல்முனை, சம்மாந்துறை உட்பட அம்பாறை மாவட்டத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இஸ்லாமிய சட்டப்படி கூடாது என்பதுடன் யாரும் பதுக்கி வைத்தால் உங்கள் நெல்லுக்கு நீங்கள் தற்போது பெறும் விலையை விட குறைந்த விலையில் நெல்லை விற்க நேரிடும் என்ற எச்சரிக்கை பள்ளிவாயல்களில் விடுக்கப்பட்டது. தற்போது அரிசி தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு கிடைக்கின்றது. இத்தகைய அதிரடிச் செயற்பாடுகளில் பாமர மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் நேசிக்கின்றனர்.

இலங்கையில் ஆட்சியுள்ள அரசினால் அதிரடியாகச் செய்யப்படும் சட்டதிட்ட மாற்றங்கள், மக்கள் நலன் சார்ந்த விடயங்கள், அபிவிருத்தித் திட்டங்கள், சுமூகமான வாழ்கை, மக்கள் அதிசயக்கின்ற செயற்திட்டங்கள் என அனைத்தையும் மீறி எதிர் கட்சிகள் கூட்டமைப்பு வெற்றியடையும் என கட்டியம் கூற முடியாதுள்ளது.

கீரைக் கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்ற விடயத்துக்காகவோ அல்லது தற்போதுள்ள கட்சிகளையும் இழந்துவிட்டால் தமிழ் சமூகம் அநாதையாகிவிடும் என்று சிலருக்கிருக்கின்ற பயத்தினாலோ இக் கூட்டணி ஆதரிக்கலாமே ஒழிய! அவர்களை ஆதரிப்பதால் தற்போதைய சுமூக நிலையை விட உடனடியாக எதனையும் எதிரணிக் கூட்டமைப்பினால் செய்துவிட முடியாது என்பது மக்களுக்குத் தெரியும்.

பழைய பழுத்த அரசியல் வாதிகள் சிலர் அரசியலில் இருந்து விலகுவதும் ஆளும் கூட்டணியில் பல படித்த முகங்கள் அறிமுகம் செய்யப்படுவதும் (முன்னாள் பயங்கரவாதிகள் அல்ல) ஆளும் கட்சிக்கு ப்பிளஸ் பொயிண்டாக இருக்கின்றது. காரணம் பழுத்த பழங்கங்கள் மக்களை ஏமாற்றிய கதைகள் சந்திகளில் கதைக்கப்படுவதால் இது சாத்தியமாகியுள்ளது.

இனி நடக்க இருக்கின்ற தேர்தல்கள் முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைவருக்கும் பல நெஞ்சுவலிகளை ஏற்படுத்தப் போவது உறுதி. காரணம் புலிகள் இருக்கும்வரை நாம் முஸ்லீம் காங்கிரஸை பாதுகாக்கவேண்டிய தேவையிருந்தது. இனி ஒற்றுமையான நாடு என்று வரும்போது நாம் பிரிந்து இனத்துவேஷம் பேசுவது கூடாது என்று பல முஸ்லீம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர்களே பேசுவதை காண முடிகிறது.

தமிழர்களுக்கான சரியான தீர்வுத் திட்டம் மட்டும் தற்போதைய அரசினால் முன்வைக்கப்பட்டால் இனி தமிழ் மக்களின் எந்த சந்தேகப் பார்வைக்கும் ஆளும் அரசு உட்படப்போவதில்லை.

ஆனால் எதிர் கூட்டணியைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியிலும் கட்சி ரீதியிலும் ஆளும் தரப்பை விட அதிக குறைகளுடன் இவர்கள் நோக்கப்படுகின்றனர். அத்துடன் இவர்களுக்குள் இருக்கும் பணிப்போரும் ஒற்றுமையின்மையும் அவர்களை விட பாமர மக்களுக்கு நன்றாகத் தெரிகிறது.

எனவே தற்போதைய சூழலில் எதிர்கட்சிக் கூட்டணி தேர்தலில் வென்றால் அது இன்னும் ஒரு அதிசயமாகவே அமையும்.

இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VIII

1 comments :

Ram November 9, 2009 at 6:15 PM  

They are forming a unity to become an Mp for the next time. it is not for the beeter life of the people.it is for their good future only.until the election day they will talk about the unity and later they will act on their own.we had experiance from TULF to
TNA.I think this time the people must be informed not to vote this so called united parties.let them elect comitted people who will work for the better life of the people

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com