Friday, November 20, 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவை கொல்லச் சதி மேற்கொள்ளப்படுகிறது. லங்கா இரிதா

ஓய்வு பெற்ற முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா வை கொல்வதற்கு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக லங்கா இரிதா எனப்படும் சிங்கள மொழிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் புலிகளியக்கத்தின் முக்கிய தளபதியாக இருந்து அரசுடன் இணைந்து கொண்டுள்ள அரசியல்வாதி ஒருவர் மிகவும் பயிற்றப்பட்ட பெண் தற்கொலைதாரி ஒருவரை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு வந்து, நோர்வே தூதரகத்தில் வேலைசெய்யும் தமிழ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீடொன்றை வாடகைக்கு எடுத்து கொழும்பில் தங்கியிருந்த வசந்தி எனும் மேற்படி தற்கொலைதாரிக்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அண்மையில் அவ்வீட்டில் இருவரும் பல தடவைகள் சந்தித்துள்ளனர். தற்கொலைதாரியை அரசியல்வாதி சந்தித்த விடயம் வெளியானதை தொடர்ந்து வசந்தி தம்புள்ள பிரதேசத்திற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இச்செய்தியை முற்றாக மறுத்துள்ள அரசு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment