இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் புத்திஜீவிகள், தமிழ் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தால் அது முஸ்லீம்களுக்கு ஆபத்தாகாதா? என்று கேட்டனர். விடுதலைப் புலிகள் முஸ்லிம் சமூகத்துக்கு இழைத்தது போன்ற கொடுமைகளைவிடப் பெரிய கொடுமைகளை யாரும் இழைக்க மாட்டார்கள்.
பயங்கரவாதத்தை எனக்கு உணர்த்திய முதலாவது குண்டு 1983 ஆம் ஆண்டு வெடித்தது. அப்போது யாழ்பாணம் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி மாணவனாக இருந்தேன். தின்னவேலி என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற திருநெல்வேலிச் சந்தியில் அந்தக் குண்டு வெடித்த்து. 13 இலங்கை இராணுத்தினரை பலிகொண்ட அக்குண்டு வெடிப்புத்தான் “கறுப்பு ஜூலை” என அறியப்பட்ட தமிழர்களுக்கெதிரான பெரும்பான்மையின் வெறியாட்டத்துக்குக் காரணமாயமைந்தது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நடந்த தாக்குதல் அது என்று பிற்காலத்தில் சிலர் சொல்லக் கேட்டும், எழூதப் படித்தும் இருக்கிறேன். கலாசாலையில் அக்குண்டு வெடிப்பு பற்றி வெவ்வேறு விதமான கருத்துகளையும், கதைகளையும் அங்கு கற்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த நண்பர்கள் சொன்னார்கள்.
அவ்வாறு சொல்லப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் என்னவெனில், அந்தச் சம்பவத்தில் படுகொலையான பதின்மூன்று இராணுவச் சிப்பாய்களும் ஒரு தமிழ் யுவதியைக் கற்பழித்தவர்கள் என்பதுதான். ஒவ்வொறுவரும் இஷ்டத்துக்குச் சார்பாகவும் எதிராகவும் கருத்துகளையும், கதைகளையும் பேசினார்கள் என்பதற்கு இந்தக் கற்பழிப்புக் கதை உதாரணம்.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் முழு நாடும் ஸ்தம்பித்தது. நானும் எனது ஊர் நண்பரும் இரண்டாவது தினம் மன்னாருக்குச் சென்று அங்கிருந்து அடுத்த தினம் அனுராதபுரம் வந்து பொலன்னறுவை வந்தடைந்தோம். அச்சத்துடன் நாம் மேற்கொண்ட இந்தப் பயணம் வாழ்நாளில் மறக்க முடியாதது.
பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள அடுத்த ஊரான மன்னம்பிட்டிக்கு வந்தவுடன், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் பயணம் தடைப்பட்டது. இப்போது நகரமாகிவரும் மன்னம்பிட்டி அந்நாளில் வெறும் காடு. அந்த ஊரிலுள்ள சின்னஞ்சிறிய பள்ளிவாலுக்குள் இரண்டு இரவுகளை நாம் கழிக்க வேண்டியிருந்தது. பகல் பொழுதுகளைக் காட்டில் மேய்ந்து திரிந்தோம். மூன்றாவது நாளே ஊருக்குச் செல்ல முடிந்தது.
1981 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சன்னங்களுக்குகிடையில் மாட்டிக் கொண்ட மற்றோரு அனுபவம் கிடைத்தது. அவ்வாண்டின் விளையாட்டு விழாவில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்களை அச்சிடுவதற்கு யாழ்பாண நகரத்தில் உள்ள ஓர் அச்சகத்தில் கொடுத்திருந்தோம். பிற்பகல் 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகவிருந்த நிலையில், காலையில் அவற்றை எடுத்து வரும் பொறுப்பு விளையாட்டு நிகழ்வுகளின் செயலாளர் என்ற வகையில் எனக்கிருந்தது.
சரியாகப் பத்து முப்பதுக்குச் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்தபோது துப்பாக்கிச் சன்னங்கள் பறந்தன. இராணுவத்தினரையோ போராட்டக் குழுக்களையோ அந்த இடத்தில் நான் காணாதபோதும் எனக்கு முன்னால் ஒரு சுற்றுச் சன்னங்கள் தெறித்தன. அவ்விடத்தில் நின்ற தனியார் பஸ் ஒன்று பின்பக்கமாக வேகமாக நகர, அதிலிருந்த பையன் “அண்ணே! ஓடி வாருங்கோ!” என்று என்னைப்பார்த்துக் கத்தினான். ரிவர்சிலேயே ஓடிய பஸ்ஸில் தாவி ஏறித்தப்பிக்கொண்டேன்.
அதற்குப் பிறகு நடந்தது காத்தான்குடி பள்ளிவாசல்களின் படுகொலை, எனது இரண்டாவது தாய் மாமாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளியிருந்தது ஹூஸைனியா பள்ளிவாசல் படிக்கும் வயதில் விடுமுறை காலத்தில் மாமா வீட்டில் தங்கியிருக்கும்போது இந்தப் பள்ளிவாசலில் மாலை மக்ரிபு-இஷா தொழுகைகளுக்கு நான்தான் பாங்கு சொல்லுவேன்.
1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு நாள் மக்ரிபுத் தொழுக்கு வந்த 98 வீதமானவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. அந்தப் பிரதேசத்தைச் சூழ மாமாவின் மனைவி குடும்பத்தினர்தான் வசித்தார்கள். பாங்கு ஒலித்துததால் எட்டு நடைபோட்டுப் பள்ளிவாசளுக்குள் வந்துவிடுவார்கள். முஸ்லிம்களைப்போல் தொப்பி அணிந்து வந்த விடுதலைப் புலிகள் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு கைக்குண்டை வீசி வெடிக்கச் செய்துவிட்டு தொழுதுகொண்டிருந்தோர் மீது யன்னலுக்குள்ளால் துப்பாக்கி நீட்டிச் சுட்டுத் தள்ளினார்கள். மாமாவுக்கு ஒரு கை வழங்காது. தனது மற்றக் கையினால் தனது ஆறு வயது மகனை அணைத்தபடி கிடந்த மையத்துகளின் புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு முஸ்லிமாலும் தமிழ்ப் பிரதேசத்தை ஊடறுத்துப் பயணிக்க முடியாது.
சம்பவம் நடந்த அடுத்த தினம் கொழும்பில் தரித்திருந்த மாமாவின் மூத்த மகன் நல்மனமுள்ள அரசியல்வாதிகளின் உதவியுடன் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் அங்கு போய்ச் சேர்ந்தான். மையித்துக்களையும் அவற்றை பள்ளிவரை கொண்டு அடக்கம் செய்ததையும் ஒளிப்பதிவு செய்திருந்ததை அவன்தான் எனக்கு கொழும்புக்கு கொண்டுவந்து காட்டினான். நல்லடக்கதின்போது மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்து ஜனாஸாக்களின் கஃபன் புடைவைகளைத் தாண்டி இரத்தம் வழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மையித்துக்களைத் தூக்கிய அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.
பிறகு 1992 ஆம் ஆண்டு டிசம்பரில் எமது பிரதேசமே கலங்கிய சம்பவம் நடந்தது. கொழும்பில் வசித்த நான் குடும்பத்தோடு கதிர்காமம் சென்று அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் (சனக்கூட்டம்) அன்றிரவே திரும்பியிருந்தோம். வீட்டுக்கு வந்து வாகனத்தை நிறுத்தும்போது எனது நண்பர் ஒருவர் நின்றிருந்தார். எனது கடைசித் தாய்மாமன் மற்றொரு தாக்குதலில் அன்று காலை அதே இடத்திலேயே மரணமடைந்த செய்தியுடன் அவர் நின்றிருந்தார். எமது பிரதேசத்தின் மீது அச்சத்தையும் உச்சக்கட்ட அடக்கு முறையையும் ஏற்படுத்துவதற்காக தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப் புறப்பட்டவர்கள் செய்த நிகழ்வு அது.
அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஆறுபேர். மேலதிக அரச அதிபர் (இந்தியாவில் கலெக்கடர்)வை. அகமது (இவர் ஒரு பிரபல்யம் பெற்ற எழுத்தாளரும் கூட) அரசாங்க அதிபர் உதுமான், சட்டத்தரணி முகைதீன் (எனது சகோதரரின் மனைவியின் சாச்சா (சித்தப்பா)), பாடசாலை அதிபர் மஃமூது (எனது கடைசித் தாய்மாமன்), சாரதி மகேந்திரன், கொலைகளைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தமைக்காக கொல்லப்பட்ட மற்றொருவர் சாஹுல் ஹமீது (விறகு சேகரித்து வாழ்க்கை நடத்துபவர்) ஆகியோர். இவர்களில் கடைசி நபர் தவிர்ந்த ஏனையோர் மாருதி ஜிப்ஸியில் சென்று கொண்டிருந்தபோது மீயான் குளச் சந்தியில் கண்ணிவெடி மூலம் ஜீப்பைப் புரட்டி கீழே விழுந்தவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர்.
நான் அடுத்தநாள் மதியம் ஊர்போய்ச் சேருவதற்குள் மையித்துகளை அடக்கியிருந்தார்கள். மாமாவின் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்ததாகவும் ஒரு கால் உடைக்கப்பட்டிருந்ததாகவும் எனது மச்சான் சொன்னான். மேலதிக அரச அதிபர், அரச அதிபராக எல்லாம் முஸ்லீம்கள் இருக்கக் கூடாது என்ற விடுதலை வீரர்களின் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்தக் கொலைகள் நடைபெற்றதாகப் பேசப்பட்டது. இதற்கு முன்னரும் இப்றாஹிம், ஹபீப் முகம்மத் ஆகிய அரச அதிபர்கள் காரணமின்றி கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் இக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நான் கொழும்பில் கற்பித்துக் கொண்டிருந்த காலப்பிரிவில் என்னுடன் ஒரே பாடசாலையில் கற்பித்த இரண்டு ஆசிரிய நண்பர்களும் குண்டுகளில் அகப்பட்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்கள். கொழும்பு புறக்கோட்டையில் ஜே.ஆர் ஜயவர்தனா ஆட்சிக் காலத்தில் வெடித்துப் பெரும் இழப்பை ஏற்படுத்திய குண்டில் அகப்பட்டவர் மாவனல்லையைச் சேர்ந்த காமில். முகத்தில் ஆங்காங்கு ஏற்பட்டிருந்த பள்ளங்களில் பிளாஸ்ரிக் ஸர்ஜரி செய்து சதைத் துண்டுகள் பொருத்தப்பட்டிருந்ததை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சென்று பார்த்தேன்.
மற்றையவர் கொழும்பில் என்னுடன் கற்பித்த, என்னுடன் ஒரே போர்டிங் ஹவுஸில் (லாட்ஜ்) தங்கியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஹகீம். அரசியல் கூட்டம் பார்க்க என்னையும்தான் அழைத்தார். எனக்கு சனக்கூட்டமென்றால் அலர்ஜி. தவிர அவர் போகும்போது கூட எச்சரித்தே அனுப்பினேன்.
கூட்டம் பார்க்கப்போனவர் திரும்பிவரவில்லை. தேடினால் முதுகில் காயமேற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதுகுப் பக்கமாகத் துளைத்த வெடிகுண்டின் ஒரு துண்டுத் தகடு இதயத்துக்கு அருகிலுள்ள எலும்பில் தடயாகி நின்றிருந்ததை மருத்துவர்கள் சொன்னார்கள். பிறகு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சத்திரசிகிச்சை செய்து அதனை வெளியே எடுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.
இவ்வாறு உள்நாட்டு யுத்த காலத்தில் இழப்புக்களைச் சந்தித்த பலர் இந்நாட்டில் இருக்கிறார்கள். தமிழர் விடுதலைக்குப் புறப்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்கள் பெரும்பான்மை சிங்கள அரசுடன் அடக்கு முறையிலிருந்து விடுதலை என்ற கோஷத்துடன் போராடிய அதே சமயம், சிறுபான்மை முஸ்லீம்களை அடக்கி ஒடுக்கி வைப்பது என்ற ரகசிய கோஷத்துடன்தான் இயங்கினார்கள். பெரும்பான்மைச் சிங்களவரால் முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு விதப் பாதிப்பு என்றால், மீதி முழுவதையும் நிரப்பி புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் தமிழர் விடுதலை இயக்கங்களில் இருந்தவர்களே, சிங்களப் பிரதேசத்துக்குள் நாளின் எந்த வேளையிலும் போய்வர முடிந்த முஸ்லீம் ஒருவரால், ஒரு தமிழ் ஊருக்குள் பகலில் கூட சென்று திரும்ப முடியாத நிலை நீண்ட காலம் இருந்திருக்கிறது என்றால், அது எவ்வாறான அடக்குமுறை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சில காலங்களுக்கு முன்னர் யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழரான சக மூத்த ஒலிபரப்பாளர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு விடயத்த்தை நினைவு கூர்ந்தார். யாழ்பாணத்தில் தனக்கு நீள் காற்சட்டை(பேண்ட்) தைத்துத் தரும் டைலரான முஸ்லீம் நண்பரை தற்செயலாகக் கண்டபோது தனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்று சொன்னார். காரணம் அவரது டைலர் நண்பர் 24 மணிநேர அவகாசத்தில் புலிகளால் துரத்தப்பட்டவர் என்பதுதான். நான் நண்பரை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டேன் என்று சொன்னார்.
இவ்வாறான் நல்ல உள்ளங்களும் தமிழர்களில் இருக்கவே செய்கின்றனர். அதேவேளை புரிய முடிந்த அநியாயங்களையெல்லாம் புரிந்துவிட்டு ஐரோப்பாவில் அகதியாய் போயிருந்துகொண்டு சமூக நீதிபற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்போரும் உள்ளனர். அதற்கு அவர்களின் எழுத்தகளே சாட்சி. குண்டு வெடிப்புப் பற்றிப் பேச ஆரம்பித்த நான் வேறு எங்கோ போய்விட்டேன் போலத்தெரிகிறது.
10.03.2009 அன்று தென்னிலங்கையில் கொடப்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகளை ஆரம்பிக்கும்போது வெடித்த குண்டுதான் கடைசியாக இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடைசிக்குண்டு. இந்தக் குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய எனது சகோதரரும், ஏனைய அமைச்சர்களும் தங்களைச் சுதாகரித்துக்கொண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்றார்கள். அங்கும் ஒரு தற்கொலைதாரி நின்றிருந்தார் என்பது இவர்களுக்குத் தெரியாது.
முதலாவது குண்டில் அமைச்சர்கள் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும்போது, அவர்களைப் பார்ப்பதற்காக ஜனாதிபதி அங்கே வருகை தருவார். அவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக மற்றொரு தற்கொலைதாரியைப் பயன்படுத்துவது விடுதலைப் புலிகளின் திட்டமாக இருந்தது. அமைச்சர்களில் ஒருவர் தவிர வேறு ஒருவரும் காயமடையவில்லை என்பதாலும், இரண்டாவது குண்டுதாரி படையினரால் கைதுசெய்யப்பட்டதாலும் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதுவே இறுதித் தற்கொலைக் குண்டாகவும் இருந்தது. இரண்டாவது தற்கொலைதாரி கைதுசெய்யப்பட்ட விடயம் சம்பவம் நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின்னரே ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இங்கே நான் குறிப்பிட்ட குண்டு வெடிப்புக்களும் தாக்குதல்களும் எனக்கும் எனது உறவினர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் தொடர்பானது. என்னைப்போல் அனுபவங்களைப் பெற்றவர்கள் ஏராளம்பேர் உள்ளனர். இந்தக் கால் நூற்றாண்டுக்குள் வெடித்த துப்பாக்கிக் குண்டுகளிலும் துப்பாக்கி ரவைகளிலும் தமிழ் விடுதலை இயங்கங்களின் கடத்தல்களிலும் தப்பி வாழ்வதுகூட ஒரு கொடுப்பினை என்றே கருதுகிறேன்.
இப்போது இலங்கையில் மிகப்பெரும் அமைதி நிலவுகிறது. இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் புத்திஜீவிகள் தமிழ் விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தால் அது முஸ்லீம்களுக்கு ஆபத்தாகதா? என்று கேட்டனர். விடுதலைப் புலிகள் முஸ்லீம் சமூகத்திற்கு இழைத்தது போன்ற கொடுமைகளை விடப் பெரிய கொடுமைகளை யாரும் இழைக்க மாட்டார்கள்.
விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரும் இலங்கையில் முஸ்லீம்கள் வாழ்ந்தார்கள். தமிழர்களும் வாழ்ந்தார்கள். எப்போது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததோ அன்று போனது நிம்மதி. சிறுபான்மை என்று ஒரு இனம் இலங்கையில் கிடையாது என்று நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றச் சிறப்பமர்வில் முழு உலகத்துக்கும் சொல்லியிருக்கையில், அதைத்தான் நாம் நம்ப வேண்டியிருக்கிறது.
பிரபாகரன் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு மேலாக கொண்டாட்டங்கள் களைகட்டின. கட்டாக்காலிகளாகத் திரியும் சிங்கள இளைஞர்கள் ஆங்காங்கே கசிப்பு (கள்ளச் சாராயம்) அருந்திவிட்டு ஆட்டாக்களில் இரவு பகலாகக் கூச்சலிட்டுத் திரிந்தனர். அதை ஒரு பயங்கரமாகச் சித்தரிக்க முடியாது இந்தக் கோஷ்டி கல்யாணவீடாக இருந்தாலும் சரி, காது குத்துவிழாவாக இருந்தாலும் சரி, தண்ணியடிப்பதில் கவனம் செலுத்தும் கோஷ்டி. மற்றப்படிக்கு இக்கொண்டாட்டங்களின் பிரமாண்டங்களைப் பார்த்த சிங்களப் புத்தி ஜீவிகள் விசனம் தெரிவித்துமுள்ளனர்.
எனது நண்பரின் நண்பரான இராணுவ வீரர் ஒருவரே இக்கொண்டாட்டங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்ட பல சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களது நலன்களை மாறி மாறி ஆட்சி செய்த இரு பிரதான கட்சிகளும் புறக்கணித்தன் விளைவே இந்த உள்நாட்டு யுத்தம் எனச் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
இதைத் தவிர, கடந்த கால்நூற்றாண்டாக இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரது வாழ்விலும் பிரபாகரனும் அவரது இயக்கமும்- அது சரியோ பிழையோ தாக்கம் செலுத்தியிருப்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இன்னொரு பிரபாகரன் உருவாவதைத் தவிர்க்கும் நிர்ப்பந்தம் சிங்களப் பெரும்பான்மையினர் கையில்தான் உள்ளது.
மக்கள் குண்டுகளையும், துப்பாக்கிகளையும் விரும்புவது கிடையாது. எனவே இப்போது எந்த இடத்துக்கும் எந்த வாகனத்திலும் சென்று வரலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. விடுதலை சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டு நிற்கும் எவரும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் வரப்போவதில்லை. ‘பிச்சை வேண்டாம் நாயை பிடி’ என்கிற நிலையில்தான் தமிழ் மக்கள் நீண்டகாலமாக இருந்தார்கள் என்பது எனது கணிப்பு. இது இங்கு வாழும் எல்லோருக்கும் பொருந்தும்.
இப்போது எங்கள் தேசத்தில் குண்டுகள் வெடிப்பதில்லை. இனிமேல் வெடிப்பதற்கான நிலவரமும் இல்லை. மீண்டும் சொல்கிறேன். குண்டுகளையும் துப்பாக்கிகளையும் மக்கள் விரும்புவதில்லை.
(அஷ்ரப் சிஹாப்தீன் எழுதி அக்டோபர் 22, 2009 ல் இந்தியாவின் சமநிலைச் சமுதாயம் இதழில் வெளியானது)
இணையத்தளத்திற்காக
கிழக்கான் ஆதம்.
இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VIII
True
ReplyDelete