Saturday, November 14, 2009

ராம் கைது செய்யப்பட்டார். நகுலன் தலைமறைவு.

புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியும் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்தவுடன் அவ்வியக்கத்தின் தலைமையை ஏற்று நடாத்துவார் என புலம்பெயர் புலிகளால் எதிர்பார்க்கப்பட்ட கேணல். ராம் மின்னேரிய முகாமில் இருந்து தப்பியோடி 5 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அம்பாறை கஞ்சிகுறிச்சாறு, புளுக்குணாவ காட்டுப்பகுதியில் தப்பியிருந்த ராம், நகுலன் தலைமையிலான குழுவினர் கடந்த யூலை மாதம் நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். சரணடைந்த இவர்களை மிகவும் இரகசியமாக வைத்து விசாரணை செய்த புலனாய்வுப் பிரிவினர் இவர்களின் உதவியுடன் புலிகள் தொடர்பான மிக முக்கியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மின்னேரிய இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராம் தலைமையிலான குழுவினை சேர்ந்த ஐவர் இம்மாதம் 5 ம் திகதி (NOV 05) முகாமில் இருந்து தப்பி ஓடியுள்ளனர், தப்பியோடிய இவர்களை தேடி காடுகளை சுற்றி வளைத்த படையினரால் 3 நாட்களாகியும் அவர்கள் தொடர்பான எவ்வித தடயங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் பிரதேச மக்களின் உதவியை நாடிய பாதுகாப்புப் படையினர் தப்பியோடியோரது புகைப்படங்களை மக்களுக்கு வினியோகித்து தேடுதலுக்கா மக்களையும் அழைத்துக் கொண்டு காடுகளுள் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்களின் உதவியுடன் காடுகளுக்குள் படையினர் சென்ற போது, மின்னேரிய ஆற்றிற்கு 6 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் காணப்படும் கிரித்தலஆறு எனப்படும் ஆற்றுக்கு ஆப்பால் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதில் உள்ள பாரிய மரம் ஒன்றின் கிளை ஒன்று அசைந்துள்ளது. அப்பகுதில் உள்ள மரங்களில் ஆபத்து விளைவிக்க கூடிய மிருகங்கள் காணப்படுகின்றது. அதன் காரணமாக அச்சமடைந்த சிப்பாய் ஒருவர் கல்லொன்றை எடுத்து மரத்தை நோக்கி எறிய முற்பட்டபோது, சேர் வெடிதியன்ட எப்பா என சொல்லிக் கொண்டு இறங்கிய கேணல் ராம் 09ம் திகதி 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். ராமுடன் தப்பியோடிய மேலும் ஒருவர் அப்பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்டதுடன், நகுலன் மற்றும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

அப்பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தப்பியோடியோரை தேடும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது. ஆனால் நகுலன் இதுவரை பிடிபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகுலன் பிடிபட்டு அவரது கதை முடிந்துவிட்டதாக அல்லது அவர் உண்மையிலேயே தப்பி விட்டாரா என்பது தொடர்ந்தும் சந்தேகமாகவே உள்ளது.

ராம் தப்பியோடியதில் இருந்து அவரது தலைவிதி மாறியுள்ளது என்பது மட்டும் உண்மை. இத்தனை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த குழுவினருக்கு ஈற்றில் என்ன நடந்திருக்கும் என்பது யாவராலும் ஊகித்துக்கொள்ள முடியும். ஆனால் அவர் தப்பியோடியபோது, அவருடைய படம் பிரதேசவாசிகளுக்கு வினியோகிக்கப்பட்டதுடன் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியும் அம்பலத்திற்கு வருகின்றது. ஏனவே அவரது விதியை நீதிமன்றுதான் தீர்மானிக்க முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

ராம் குழுவினரிடமிருந்து கிழக்கு மாகாண புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளதுடன், சகலவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டள்ளதாக நம்பப்படுகின்றது. அதே நேரம் ராமின் தொலைபேசியில் காணப்பட்ட கே.பி யின் சற்லைட் தொலைபேசியின் இலக்கத்தின் உதவியுடனேயே கே.பி் கைது செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com