வடக்கு வழமைக்கு திரும்புகின்றது
வடக்கிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் இப்போது நீக்கியிருக்கின்றது. அவர்கள் ஆளடையாளத்தை நிரூபிக்கக் கூடிய ஆவணமொன்றுடன் ஏ-9 பாதைக்கூடாகக் கொழும்புக்கு வருவதில் இப்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லை. வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட லொறிகளும் பொருட்களை ஏற்றிக்கொண்டு கட்டுப்பாடின்றிக் கொழும்புக்கு வரலாம்.
பாதுகாப்புப் படையினரின் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின் வட பகுதி மக்கள் பெற்ற படிப்படியான நன்மைகளுள் இது பிந்தியது. அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாடு நீங்கி, மக்கள் நியாய விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய நிலை ஏற்பட்டது.
குடாநாட்டில் உள்ளூர் போக்குவரத்துச் சேவை அபிவிருத்தி செய்யப்பட்டது. குடாநாட்டுக்குக் வெளியிலான பிரயாணம் முற்றாகத் தடைப்பட்டிருந்த நிலைமாறி, சில கட்டுப்பாடுகளுடன் குடாநாட்டுக்கு வெளியே பிரயாணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இப்போது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும். லொறிகளும் வட பகுதி உற்பத்திப் பொருட்களைத் தென்னிலங்கைச் சந்தைக்குத் தாராளமாகக் கொண்டு வரலாம்.
இவ்வளவு மாற்றங்களும் ஏற்பட்டதன் மூலம் வடக்கில் சுமுக நிலை திரும்பிவிட்டது எனக் கூற வரவில்லை. ஆனால் இவையெல்லாம் சுமுக நிலையை நோக்கிய நகர்வுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த நகர்வை முழுமைப்படுத்துவதில் அரசாங்கத்தின் பணி முக்கியமானதெனினும் மக்களின் பங்களிப்பும் அவசியமானது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை வெற்றி கரமாகப் பூர்த்தி செய்வதற்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதில் மக்களின் பங்கு முக்கியமானது.
நீரைப் பருகும் போது அதன் ஊற்றை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது விநாட்நாமிய பழமொழி. வட பகுதி மக்கள் இப்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள நன் மைகளை அனுபவிக்கின்ற அதேவேளை இந்த நன் மைகள் எவ்வாறு கிடைத்தன என்பது பற்றியும் அவை மறுக்கப்பட்ட பின்னணி பற்றியும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
அருணோதயம் தெரிகின்றதெனக் கூறி அந்தகாரத்துக்கு மக்களை இட்டுச் சென்ற யுகத்திலேயே வட பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. புலிகளின் அரசியல் செல்வழியை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் எனக் கூற முடியாது.
மக்கள் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஆயுதக் கலாசாரம் அங்கு மேலோங்கியிருந்தது. மக்களின் சகல அடிப்படை உரிமைகளும் புலிகளால் மறுக்கப்பட்டன. மூன்று தசாப்த கால இருண்ட யுகத்திலிருந்து இப்போது மக்கள் விடுபட்டிருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் படிப்படியாக இம் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கி வருகின்றது.
ஏனைய மாகாணங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை வடபகுதி மக்களும் அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிப்பது சிரமமானதல்ல. இந்த நிலையை அடைவதற்கு முன்னோடியாக மாகாண மட்டத்தில் மக்களின் பிரதிநிதித்துவ நிர்வாகம் நடைபெற வேண்டியது ஒரு அவசியத் தேவை. மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வட மாகாணத்துக்கு இது பிரதான குறைபாடு.
நன்றி தினகன்
0 comments :
Post a Comment