பாராளுமன்ற அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படலாம்.
முக்கிய தேர்தல் நடைபெற விருப்பதனால் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் அறிவிக்கக் கூடுமென அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடுமெனக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்ற அமர்வுகள் வழமை போன்று நடைபெறும் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறப்படுகின்றது.
இவ்வருடத்தில் கடந்த மே மாதமும் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, புலிகளுடனான போர் முடிவடைந்து, வெற்றியை அறிவிக்கும் பொருட்டு ஜனாதிபதி, சபை அமர்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகத் தமக்கும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேட்க்கப்பட்டபோது, “இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது. எனினும் இவ்வாறு சபை அமர்வுகளை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. இந்நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது” என்றார்.
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ளமை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment