Wednesday, November 25, 2009

யாழ் ஊடகங்களுக்கு முகமூடி அணிந்தோரால் மிரட்டல் கடிதம்

யாழ்பாணத்திலிருந்து வெளிவருகின்ற யாழ் தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்ற இரு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
யாழ் மக்களை குழப்பும் விதத்தில் ' விடுதலைப் புலிகள் ' குறித்த செய்திகளை வெளியிடுவதாகவும், 2002 ஆம் ஆண்டு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் புகைப்படங்களை மீண்டும் பிரசுரிப்பதாகவும் மேற்படி பத்த்ரிகைகளுக்கு மிரட்டல் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டால் மேலும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் , "தொடர்ந்து நாங்கள் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்க மாட்டோம்" என்றும் அக்கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி அலுவலகத்திற்குள் நேரில் வந்த இருவரே இந்த மிரட்டலை விட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதன் 25 ஆம் தேதி யாழில் இருந்து வெளியான பத்திரிகைகளின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பின்னர் இந்த மிரட்டல் இப்போது விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் மிரட்டல் விடுத்தவர்கள் தம்மை 'நாட்டைக் காக்கும் முன்னணி' என கூறியிருந்தனர்.ஆனால் நேற்று இரவு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதத்தில் 'தமிழர்களைக் காக்கும் முன்னணி" என்று குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் பத்திரிகைககள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்கள் ' விடுதலைப் புலிகளை' பாராட்டும்படியான ஒரு தோற்றத்தை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து வருவதாகவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com