ஒபாமாவின் பாதுகாப்பில் ஓட்டையா ?
வாஷிங்டன்:அமெரிக்காவில், அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாத ஒரு தம்பதியினர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் கடந்த செவ்வாயன்று விருந்தளித்தார்.
கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த இந்த விருந்து நிகழ்ச்சியில், விர்ஜினியாவின் வடபகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினரும், "டிவி' நடிகர்களுமான மைக்கேல் மற்றும் தாரிக் சலாகி ஆகியோர் அழைப்பு இல்லாமல், கலந்து கொண்டனர். அதன் பின், அவர்கள் தாங்கள் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து, பேஸ்புக்கில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டனர். இதில், அந்த தம்பதியினர், விருந்து நடந்த அறையில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், வாஷிங்டன் மேயர் அட்ரியன் பென்டி, வெள்ளை மாளிகையின் பணியாளர்கள் தலைவர் ரகீம் இமானுவேல் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
*இது குறித்து ஏஜன்சி செய்தித் தொடர்பாளர் எட்வின் டோனாவன் கூறியதாவது:*விர்ஜினியாவைச்
சேர்ந்த தம்பதியர் அழைப்பு இல்லாமல் விருந்தில் கலந்து கொண்டாலும், அதனால், அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை. ஏனென்றால், 300க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.,க்கள் வந்த கடும் பாதுகாப்பு சோதனைகளை தாண்டியே இந்த தம்பதியினரும் விருந்து நடக்கும் இடத்தில் நுழைந்துள்ளனர். எனினும், இவர்கள் இருவரும் அழைப்பு இல்லாமல், எவ்வாறு விருந்து நடக்கும் இடத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்த, அமெரிக்க ரகசிய சேவை பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு எட்வின் டோனாவன் கூறினார்.
இருநாட்டு உயர் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி, அழைப்பு இல்லாத இருவர், விருந்து நடந்த இடத்தில் நுழைந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் இத்தகவலை வெளியிட்டு, எப்படி அழையா விருந்தாளிகள் இப்பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு வரமுடிந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து முழு விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
0 comments :
Post a Comment