அமெரிக்காவின் விசாரணையை நிராகரித்தேன் : ஜெனரல் பொன்சேகா.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்ய முற்பட்டிருந்தனர். விசாரணை நேரத்திற்கு முன்னர் அமெரிக்காவை விட்டு வெளியேறி நாடுவந்தடைந்துள்ள அவர், அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரின் வேண்டுதலை தான் நிராகரித்ததாக திவியின எனும் சிங்களமொழிப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
விசாரணை ஒன்றுக்கு வருமாறு அமெரிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தபோதும், அவ்வாறான ஓர் விசாரணைக்கு முகம் கொடுப்பதற்கு தான் இலங்கை அரசின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க அதிகாரிகளின் நோக்கம் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான தகவல்களைப் பெற்றுக்கொள்வதாக இருந்ததாகவும், அதற்கான வேண்டுகோள் எழுத்து மூலம் விடுக்கப்பட்டிருந்தாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜா உரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை அரசின் வேண்டுதல் மற்றும் நடவடிக்கைகளின் பேரிலேயே ஜெனரல் இலங்கை வந்தடைந்தாக வெளிவிவகார அமைச்சர் றோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
...............................
0 comments :
Post a Comment