சவுதியில் மரண தண்டனை நிறைவேற்ற முன்னர் இலங்கை துதரகத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் குழந்தைகளை தாயார் பாரமெடுத்தார். சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்.
சவுதி அரேபியாவில் களவு மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் எனும் குற்றங்களுக்காக இலங்கையைச் சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இந்தியர் ஒருவருமாக மூவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்து. ஆனால் இம்மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக சவுதி அரசினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அதை அவர்கள் இரகசியமாக செய்து முடித்துள்ளார்கள் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வழக்கில் 7 இலங்கையர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அவர்களில் ஐவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தூதரகம், மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் சவுதியில் இருந்த காலப்பகுதியில் இந்தியர் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன் அவரும் குறிப்பிட்ட வழக்கில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணுக்கும் இந்தியருக்கும் இரு குழந்தைகள் உண்டு எனவும் அக்குழந்தைகளை பெண்ணின் தாயாரிடம் பாரமளிப்பதற்கு இலங்கைத் தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அப்பெண்ணது முதல் தார திருமணத்தின் போது இரு குழந்தைகள் உண்டு என்பது அக்குழந்தைகளும் பெண்ணின் தாயாரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி மரண தண்டனைகளுக்கு சர்வதேச மன்னிப்புச்( Amnesty International) சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007ம் ஆண்டில் 76 வெளிநாட்டவர்கள் உட்பட 158 பேரும், 2008 ஆண்டில் 40 வெளிநாட்டவர்கள் உட்பட 102 பேரும், 2009 ஆண்டின் ஆரம்பம் முதல் இன்றுவரை 18 வெளிநாட்டவர்கள் உட்பட 61 பேரும் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியவர்களாக 106 வெளிநாட்டவர்கள் உட்பட 137 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் நிறைவேற்றப்பட்டுவரும் மரண தண்டனைகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment