இலங்கைத் தமிழர் முகாம்களில் அமைச்சர்கள் ஆய்வு: முதல்வர் உத்தரவு எதிரொலி
முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களை நேற்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 340 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக, அனைத்து முகாம்களையும் அமைச்சர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நேற்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களுக்கு சென்ற அமைச்சர்கள், அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். சென்னை புழலை அடுத்த காவங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை, நேற்று மாலை துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, முகாமில் வசிப்பவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். "குடியிருப்பு, கழிப்பிட வசதி, வாகனத்திற்கு லைசென்ஸ் வழங்குதல், தனியாக ரேஷன்கடை, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு' என பல்வேறு கோரிக்கைகளை துணைமுதல்வரிடம் இலங்கைத் தமிழ் அகதிகள் தெரிவித்தனர்.
ஆய்வுக்கு பின் துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அரசின் சார்பில் பண உதவி மற்றும் ரேஷன் பொருள் வழங்கப்படுகிறது. 16 கோடியே 18 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு மேலும் பல அடிப்படை வசதி செய்து தர மத்திய அரசிடம் கோரியுள்ளோம். தமிழக அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் தெரிவிக்கப்பட்ட பிரச்னைகள் தீர்க்கப்படும். பாதுகாப்பான வீடுகள், பிறப்பு, இறப்பு சான்று எளிதில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
அகதிகளுக்கும் இலவச "டிவி': நெல்லை மாவட்டத்தில் பெருமாள்புரம், நாராணம்மாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, நெல்லை கலெக்டர் ஜெயராமன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். "இலவச "டிவி', காஸ் அடுப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அகதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என சபாநாயகர் உறுதி அளித்தார். திருச்சி மாவட்டத்திலுள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான் கோட்டை இலங்கைத்தமிழர் முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோரிக்கை மழையில் அமைச்சர்கள்
முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அமைச்சர்களிடம் தெரிவித்த கோரிக்கைகள் விவரம்:
* அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்
* கல்விக்கடன் வழங்கி உயர்கல்விக்கு உதவ வேண்டும்
*படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
* தமிழகத்தில் தொடர்ந்து தங்க விரும்புவோருக்கு மட்டும் இந்திய அரசு நிரந்தர குடியுரிமை தரலாம். அதேநேரம் மீண்டும் இலங்கை செல்ல தயாராகவுள்ளவர்களை அங்கு அனுப்பி விடலாம்.
* முகாமிலிருந்து காலை ஆறு மணிக்கு நாங்கள் வெளியேறினால் மாலை ஆறு மணிக்குள் வர வேண்டும் என்ற விதிமுறையால், எங்களின் தொழில் பாதிக்கிறது. அதை தளர்த்த வேண்டும்.
* வெளிமாவட்ட முகாம்களில் உள்ள எங்களது உறவினர்களை பார்க்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல விதிக்கப்படும் கடுமையான விதிமுறைகளை நீக்க வேண்டும்.
* குடும்பத் தலைவருக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதை அதிகப்படுத்த வேண்டும்.
* வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும்
* அரசு காப்பீட்டுத்திட்டம், ஊனமுற்றோர், முதியோர் உள்ளிட்ட உதவித்தொகைகள், இலவச "டிவி', இலவச காஸ் போன்ற தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் பலன் பெற வழி செய்ய வேண்டும்.
* முகாமில் பழைய மின்சார வயர்களை மாற்றவேண்டும்.
*குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும்.
* வீடுகளை சரிசெய்து தர வேண்டும்.
* இங்குள்ள பெண்ணை திருமணம் செய்த இலங்கை அகதிக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி தினமலர்
0 comments :
Post a Comment