மக்கள் அங்கீகாரம் பெற்ற நானே உண்மையான பொது வேட்பாளர்
அரசாங்க மற்றும் தனியார்துறை ஊடக முக்கியஸ்தர்கள் மத்தியில் ஜனாதிபதி
நாட்டின் சகல மக்கட் பிரிவினரதும் அங்கீகாரத்தைப் பெற்ற நானே நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் பிரதிநிதி என்ற வகையில் அதற்கான தகுதியும், நம்பிக்கையும் எனக்கே இருக்கிறதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்க மற்றும் தனியார்துறை ஊடக முக்கியஸ்தர்களை ஜனாதிபதி நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார். அலரிமாளிகையில் இந்தச் சந்திப்பு நடந்தது. இதில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“வடக்கு, தெற்கு என்றில்லை அனைவரும் எனது மக்களே. சகல மக்களினதும் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு”. இந்த வகையில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அவர்களும் வாக்களிப்பதற்கான உரிமையைக் கொண்டவர்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்கிணங்க கடந்த காலங்களிலும் புத்தளம், மன்னார், களுத்துறை, தெஹிவளை போன்ற இடம்பெயர்ந்தோர் வாழும் நலன்புரி நிலையங்களில் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, டளஸ் அழகப்பெரும, டி. பி. ஏக்கநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டின் அபிவிருத்தியே எமது பிரதான இலக்கு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்து நாம் மக்கள் ஆணையைப் பெற்றோம். மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் பத்தாண்டு திட்டமாக அதனை முன்னெடுப்பதே எமது நோக்கம்.
வதந்திகள், சேறு பூசுதலை பெருவாரியாகக் கொண்டதாகவே இம்முறை தேர்தல் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். இதற்கான திட்டமிட்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. எம்மைப் பொறுத்தவரை எவருக்கும் சேறு பூச வேண்டிய அவசியம் எமக்கில்லை.
பொதுவாக இரண்டு வருட காலம் உள்ளபோதே தேர்தல் ஒன்றைக் கோருவதில்லை. நான் இம்முறை இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலைக் கோரியுள்ளேன். இது பற்றி கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூவர்மாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் உத்தியோகபூர்வமான பதில் வெளியிடப்படும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நான் சிறந்த தலைமைத்துவம் வழங்கியுள்ளேன் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். நாட்டு மக்களை ஒரே நாடு என்ற ரீதியில் என்னால் ஐக்கியப்படுத்த முடிந்துள்ளது.
நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கும் நான் முறையான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளேன்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாக்க நான் தலைமைத்துவம் வழங்கியது போல் பத்தாண்டு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கும் என்னால் சிறந்த தலைமைத்துவம் வழங்க முடியும். எதிர்கால பரம்பரைக்கு நிறைவான நாடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான தலைமைத்துவத்தினை பொறுப்பேற்கவும் நான் தயார்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தவும் அபிவிருத்தி தொடர்பாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றவும் என்னால் முடிந்துள்ளது.
இது எமக்கான பெரும் வெற்றியாகும். மக்கள் எம் பக்கமே உள்ளனர். மக்கள் எமக்கே தமது ஆதரவை வழங்குவர். நாம் நூற்றுக்கு 95 வீதம் என்ற ரீதியில் வெற்றி பெறுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment