Monday, November 30, 2009

அதிபர் தேர்தலில் த.தே.கூ தனி வேட்பாளரை நிறுத்த திட்டம் ?

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக அக்கட்சியின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும், இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்ணவும் போட்டியிட உள்ள நிலையில், த.தே.கூ சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக த.தே.கூ மூத்த தலைவர்கள், பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதேவேளை, த.தே.கூ சார்பில் அதிபர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

த.தே.கூ நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போரால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ள தமிழ் மக்கள், அதிலும் குறிப்பாக தடுப்பு முகாம்களிலுள்ள மக்களுக்கு ராஜபக்ச மீதோ அல்லது சரத் பொன்சேகா மீதோ நம்பிக்கை இல்லை.

அவர்கள் வேறொரு வேட்பாளரை எதிர்பார்ப்பதாலேயே தாம் இவ்வாறு ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com