மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து, முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை மறு குடியமர்த்துவது மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி, நேற்று முன்தினம் இலங்கைக்கு திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதிபர் ராஜபக்ஷே கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றதாக தகவல் வெளியானது. இருந்தாலும், இலங்கையில் அதிபர் ராஜபக்ஷேவுக்கும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன் சேகாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்ட நிலையில் இருக்கும்போது, பிரணாப் இலங்கை சென்றது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற அதிபர் ராஜபக்ஷேவின் அச்சம் காரணமாக, இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டதாக, சரத் பொன்சேகா அறிவித்திருந்ததும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இதற்கிடையே, இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் நினைவுச் சொற்பொழிவு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி, அதில் உரையாற்றினார். அப்போது அவர்,"இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில் எந்த குறிப்பிட்ட சமூகமும் பாதிக்கப்படக் கூடாது' என்றார். இதையடுத்து, அதிபர் ராஜபக்ஷேவை நேற்று அவர் சந்தித்தார். ராஜபக்ஷே அளித்த சிற்றுண்டி விருந்திலும் பிரணாப் கலந்து கொண்டார். அப்போது இரு நாட்டு உறவை பலப்படுத்துவது,பொருளாதார மந்த நிலை, தமிழர்கள் பிரச்னை ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதுகுறித்து இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்,"அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசிய பிரணாப் முகர்ஜி, இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்துவது தொடர்பாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் பேசினார்'என்றன.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment