மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர்!
அடக்கி ஒடுக்கப்பட்டுவந்த எமது இனத்தின் விடியலுக்காக துடிப்புடன் ஆயுதம் ஏந்தி போராடி தம்முயிர்களை நாட்டுக்காகவே அர்ப்பணித்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்,போராளிகள். அவர்களின் இழப்புக்களை கொச்சைப்படுத்தி வியாபாரம் செய்யாதீர்கள்.
இந் நாளில் அந்த உத்தம ஜீவன்களுக்காக ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு அவர்களது ஆத்ம சாந்தியடைய வேண்டும் என்று பூஜியுங்கள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களேயன்றி மறைக்கப்படகூடியவர்கள் அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழினத்திற்கு ஒர் விடுதலையை பெற்று கொடுக்கவேண்டும் என்பதற்காக தன்நலம் இல்லாமல் அல்லும், பகலும் விழித்திருந்து ஆன உணவின்றி கல்லிலும், முள்ளிலும, காடுகளிலும்; தமது பாதங்களை பதித்து இறுதியில் தங்களின் உயிர்களையே இந்த நாட்டிற்கும், மக்களிற்கும் தந்துள்ளார்கள்.
அவர்களது இழப்புக்கள் அளவிடமுடியாதவை. ஆகவே புலம்பெயர் தேசங்களில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டு 'நாடுகடந்த தமிழீழம்' என்று ஒர் குழுவும் அதற்கு பணம் சேகரிப்பதற்காக மாவீரர் தினம் என்று ஒர் குழுவும், இந்த ஆண்டு பொட்டு அம்மான் உரையாற்றுவார், தலைவர் இன்னும் இரு ஆண்டுகளில் உரையாற்றுவார் என்று ஒர் குழுவும், அதிர்ச்சிதரும் வீடியோ வரும் என்று ஒர் குழுவும் மீண்டும் மீண்டும் எம்மினத்தையே ஏமாற்றி பணம் சம்பாதிப்பாதிப்பதை கண்டிப்போம்.
போராட்டம் என்ற பெயரில் இவர்களால் சேகரிக்கப்பட்ட பணங்கள் எல்லாம் இங்கே கட்டிடங்களாகவும், தனிநபர் பெயரில் வீடுகளாகவும், வர்த்தக நிலையங்களாகவுமே உள்ளது. உண்மையாக இனத்தின் மீது அக்கறையிருக்குமாயின் வன்னியில் மக்கள் பசியோடும், பட்டினிpயோடும் வாடியபோது அவர்களது பசியை போக்கிட இந்த சொத்துக்களையாவது விற்று அவர்களது பட்டினியை போக்கியிருக்க வேண்டும். மக்களிடம் சேகரிக்கப்பட்ட இவ் சொத்துக்கள் எதுவுமே அந்த மக்களை சென்றடையாத நிலையில். தொடர்ந்தும் மக்கள் பட்டினியால் வாடியபோது அந்த மக்களுக்கு உதவபோகிறோம் என்று யுத்தம் முடிவுற்ற மே மாதத்திற்கு பின்னரும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் நிதி சேகரித்தனர் என்பது சுட்டிக்காட்டதக்கது.
நம் மக்கள் உயிருக்காக போராடிய போது கூட மக்களாகிய உங்களிடம் பணத்தை கறந்த இந்த கொள்ளை கூட்டத்தினர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இனப்பற்றையும், விடுதலை உணர்வையும் வியாபாரம் ஆக்கும் முயற்சிக்கு துணைபோய்விடாதீர்கள். கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்த துன்பங்களில் இருந்து வெளியேறி அவலத்திற்கு உள்ளாகி நிற்கதியாகியுள்ள மக்களிற்கு உதவிடும் வழிகளை கண்டறியுங்கள்.
தேசத்திற்காக தம்முயிர்களை அர்ப்பணித்த போராளிகளிற்கு உங்களது உதவிகளை வழங்குங்கள் அதுவே நீங்கள் தாய்நாட்டிற்காக தம்முயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கு ஆற்றும் அஞ்சலியாகும். வெறுமனவே மாவீரர் தினம் என்ற பெயரில் இங்கிருந்து கொண்டு கார்த்திகை பூ என்றும், மெழுகுவர்த்தி என்றும் விற்பனை செய்து மேற்கொள்ளப்படும் பணப்பறிப்பு முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள்.
நொந்து போயுள்ள மக்களிடம் தொடர்ந்தும் சுறண்டும் இவ் கொள்ளை கூட்டத்தின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், நாட்டிற்காக தம்முயிரை அர்பணித்த போராளிகளின் குடும்பங்களுக்கு உங்களது உதவிகளை செய்யுங்கள். அவ் குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் தேவைப்பட்டால் நாம் அவற்றை இயன்றளவு சேகரித்து உங்களுக்காக ஊடகங்கள் ஊடாக அறிவிக்கின்றோம். பிள்ளைகளை பலிகொடுத்த பெற்றோர் இன்றும் அயலவரிடம் கையேந்தும் நிலையிலேயே வாழ்கின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களும் எமது சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய உதவிகளை புரியுங்கள் அவையே நாம் ஒவ்வொரு போராளிக்கும் செய்யும் அஞ்சலியாகும். இதைவிடுத்து மண்டபங்கள் அமைத்து பூ தூவி, தமிழகத்தில் உள்ள பிழைப்புவாதிகளை இங்கே அழைத்து பேச்சு பேச வைத்து, படம் காட்டுவதல்ல போராளிகளுக்கு செய்யும் அஞ்சலி. எந்த எதிர்பார்ப்புடன் தம் உன்னதமான உயிர்களை நாட்டுக்காக அர்ப்பணித்தார்களோ அவ் வீரர்களின் தியாகங்களுக்கு நாம் மதிப்பு செலுத்தவேண்டுமாயின், அவர்களது குடும்பத்தினருக்கு நாம் செய்யும் உதவியே நாட்டுக்காக தம்முயிர்களை அர்ப்பணித்த போராளிகளுக்கு செய்யும் சமர்ப்பணமாகும்.
தொடர்ந்தும் ஏமாளிகள் போல் இந்த பிழைப்புவாத கூட்டத்தினரின் போலி பிரச்சாரங்களுக்கு மயங்கி விடாதீர்கள். இவர்கள் துணியளவும் அந்த மாவீரர் குடும்பத்தினருக்கு உதவமாட்டார்கள். இதனை கடந்து சென்றுள்ள ஆண்டுகள் வரலாறாக பதிவு செய்துள்ளன என்பதை தெளிவுபடுத்தி கொள்வதுடன். உங்களது உழைப்பினை சரியான வழியில் செலவிடுங்கள்.
வர்த்தக நிலையத்தை மூடி உங்களது வியாபாரத்தை பாழடிக்காமல் அன்றை தினம் உங்களது வர்த்தக நிலையங்களை திறந்து அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை மாவீரர்களாகிபோன போராளிகளின் குடும்பங்களிற்கு வழங்கி உதவிடுங்கள். கடந்த காலங்களில்தான் அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்களிற்காக உங்களது வர்த்தக நிலையங்களை மூடி உங்களது ஒத்துழைப்புக்களை இங்கிருக்கும் புல்லுருவிகளுக்கு வழங்கினீர்கள்.
இனியாவது நாம் மேலே குறிப்பிட்டுள்ளதை உங்களிடம் வருகைதரும் புல்லுருவிகளுக்கு சுட்டிக்காட்டி இதனை உரிய முறையில் உரிய போராளிகளின் குடும்பங்களுக்க வழங்க முன்வாருங்கள். இதை விடுத்து வர்த்தக நிலையத்தை மூடுவதோ அல்லது இங்கு பிழைப்புக்காக மாவீரர் கொண்டாட்டம், பிறந்தநாள் விழா நடாத்தும் இவ் கூட்டத்தினருக்கு ஸ்பொன்சர் செய்வதோ மாவீரர்களுக்கு செலுத்தும் காணிக்கையாகிவிடாது.
நாம் போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை. புல்லுருவிகள், பிழைப்புவாதிகளின் செயற்பாடுகளைதான் விமர்சிக்கின்றோம். இதில் தவறு இருக்கின்றதா! இல்லை நியாயம் இருக்கின்றதா என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். விடுதலையின் பெயரால் பணம் சுறண்ட முயலும் இந்த கூட்டத்தினரின் முயற்சியை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. ஆகவே மக்களாகிய உங்களுக்கு நாம் இதனை தெளிவுபடுத்தி உண்மையின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் வழியமைத்து கொடுப்பதற்காகவே மேற்குறிப்பிட்டவற்றை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம்.
மக்களாகிய நீங்கள் இங்கிருந்து விட்ட தவறுகள்தான் எமது தாயக தேசத்தில் இரத்த ஆறுகள் ஒடுவதற்கும், முகாம்களில் மக்கள் முடக்கப்படுவதற்கும், அங்கவீனர்களாக வாழ்வதற்கும் வழியேற்படுத்தியதுடன், இன்று ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் போராட்டம் என்ற பெயரில் தவறான பாதையில் வழிநடாத்தப்பட்டு கை, கால், பார்வை இழந்து அங்கவீனர்களாக தடுப்பு முகாம்களிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை குறித்து மக்களாகிய நீங்கள் சிந்தியுங்கள்.
தவறுகள் இடம்பெறும்போது அவற்றை தட்டிக்கேட்டு நல்வழிகளை தெளிவுபடுத்தியிருந்தால் இன்றைய இந்த அவலம் ஏற்பட்டிருக்க முடியாது. மண்மீட்பு, இறுதி யுத்தம், ஆனையிறவு முகாம் தகர்ப்பு, பூநகரி முகாம் தகர்ப்பு என்று ஒவ்வொரு முறையும் உங்களை தேடி புல்லுருவிகள் வந்தபோது பணத்தையும், நகைகளையும் அள்ளி அள்ளி கொடுத்தீர்கள். இவ்வாறாக பணத்தை சுறண்டி கொண்டவர்கள். உண்மைகளை மற்றையோர் வெளிப்படுத்தியபோது துரோகிகளாகவும், மற்றையவர்களின் கைப்பொம்மையாகவும் வீண்பழி சுமத்தினர்.
நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும் நின்று தயாகத்தில் என்ன நடக்கின்றது என்ற உண்மையை கூறிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், அவர்களது வீடுகள், வாகனங்கள் என்று விடுதலையின் பெயரால் கொள்ளையடிக்கும் புல்லுருவிகள் கூட்டத்தினரால் தாக்கப்பட்டனர். அப்போது யாராவது வீதிக்கு இறங்கி போராடியிருந்தால் எமது தாயக விடுதலை சரியான வழியில் சென்றிருக்கும், அன்று அதனை கண்டிக்க தவறியதே இன்று இவைகள் எல்லாவற்றிற்கும் பிரதான காரணியாக அமைந்தது.
இவை எல்லாம் கடந்த கால வரலாற்று பதிவுகள், இவற்றை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நாம் தெளிவூட்டவேண்டிய நிலையில் உள்ளோம். ஏன் என்றால் மீண்டும் பழைய தவறுகளையே விட்டு 'நாடுகடந்த தமிழீழம்' என்ற போர்வையில் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நிகழ்வுகள் நாட்டிலே முட்கம்பி வேலிகளுக்குள்ளும், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களையே பாதிக்கும்.
ஆகவே எம்மை பொறுத்தவரை தொடர்ந்தும் மக்களை அழிவுக்கும், துன்புறுத்தலுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் முயற்சிகளுக்கு அனுமதிக்க முடியாது. அவ் மக்களின் இயல்பான வாழ்வுக்குரிய உதவிகள் குறித்தே செயலாற்றி வருகின்றோம். நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் குறித்தும் அரசுடன் தொடர்ந்து நாம் பேசி வருவதுடன், எம் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய தீர்வை பெற்று கொடுப்பது குறித்தும் எமது அரசியல் முன்னெடுப்புக்களை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய நிலையில் எமது மக்களிற்கு சமஷ்டி முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே சிறந்த தீர்வாக முடியும் என்று கருதி அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். ஆயுத போராட்டம் மூலம் ஒர் தீர்வினை பெற்றுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை எமது மக்கள் இழந்துள்ள நிலையில், மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களது தேவைகளை உணர்ந்து செயலாற்றிவருவதே பொறுப்புள்ள அரசியல் கட்சியின் கடமையாகும். அதனையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
சாத்தியப்படாத விடயங்கள் குறித்து மக்களை தொடர்ந்தும் யாரும் ஏமாற்றுவதை நாம் அனுமதிக்கபோவதில்லை. இன்று மக்களின் மீள் குடியேற்றம் அவர்களது பாதுகாப்பு குறித்தே அதிக அக்கறையை செலுத்திவரும் நாம் மக்களுக்குரிய தேவைகள் குறித்து அரசுக்கும், உதவிக்கரம் நீட்டிவரும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக்கூறி மக்களின் இயல்பு வாழ்வுக்கு எம்மாலான உதவிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். தாயக தேசத்தில் சொத்துக்கள், சொந்தங்கள் அனைத்தையும் இழந்து துன்பத்திலும், துயரத்திலும் வாழும் எமது மக்களின் மறுவாழ்வே எம் முன்னால் உள்ள ஒர் முக்கிய கடமையாகும். ஆகவே எமது தாயக உறவுகளின் மறுவாழ்வு குறித்து அக்கறையுள்ளவர்கள் அனைவரும் கைகோர்த்து மக்களின் இயல்பு வாழ்வினை மேம்படுத்தும் பணிக்கு உதவிடுமாறு கேட்டுகொள்கின்றோம்.
அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே!
அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்-PLOTE
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-DPLF
வெளியீடு: தகவல் பிரச்சார பிரிவு-கனடா
0 comments :
Post a Comment