பொலிஸ் மாஅதிபரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமைகளில் சந்திக்கலாம்
பொதுமக்கள் உதவி நிலையம் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் திறப்பு
எஸ். எஸ். பி. தலைமையில் 10 பொலிஸார் நியமனம்
வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தீர்மானித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.
பொதுமக்களை காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை சந்திக்கவே தான் முன்னர் தீர்மானித்ததாகவும் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக செல்வதால் ஒரு மணி நேரத்தினால் இதனை நீடித்ததாக வும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் 2.30 மணிக்குப் பின்னரும் தான் பொது மக்களை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு சிநேகபூர்வமான சிறந்த சேவையாற்றவும் பொலிஸ் நிலையங்களினூடாக தீர்க்கப்படாத முறைப்பாடுகளை தீர்க்கவும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய பொதுமக்கள் உதவி நிலையம் நேற்று புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியவினால் பொலிஸ் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் எந்தப் பொதுமகனும் தொலைபேசி யூடாகவோ பெக்ஸ் மூலமோ மின்னஞ்சல் மூலமோ தபால் மூலமோ அல்லது நேரடியாக வந்தோ இங்கு முறையிட முடியும் என பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் இந்த நிலையத்திற்கு பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அடங்கலாக 10 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment