ஐ. தே. க. சபையில் கூச்சல், குழப்பம்; இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்பு
அரசாங்கம் 2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் விளைவித்தனர்.
தங்களது மேசைகள் மீதிருந்த கோவைகளை மேசை மீது தட்டியபடி ஐ. தே. க. எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் எழுப்பினர். கடும் வாதப் பிரதிவாதங்களில் ஆளும் தரப்பினருடன் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடங்கள் இந்நிலைமை சபையில் நிலவியது.
ஐ. தே. க. எம்.பிக்களின் கூச்சல், குழப்பத்திற்கு மத்தியில் சபாநாயகரின் அனுமதியுடன் இடைக்கால கணக்கறிக் கையை சபையில் சமர்ப்பித்து, அதன் மீதான விவாதத்தை பிரதி நிதியமைச்சரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம ஆரம்பித்து வைத்தார்.
சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகரின் அனுமதியுடன் பிரதமர் சார்பில் அமைச்சர், கலாநிதி சரத் அமுனுகம இடைக்கால கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிக்க எழுந்தார். அப்போது நேரம் முற்பகல் 10.40 மணியாகும்.
இச்சமயம் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இந்த இடைக்கால கணக்கறிக்கை எந்த சட்டத்தின் கீழ் சபைக்குக் கொண்டு வரப்படுகின்றது என்பதை சபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டார்.
அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம :-
இது இச்சபைக்குப் புதிய இடைக்கால கணக்கறிக்கை அல்ல. இதற்கு முன்னர் 10 இடைக்கால கணக்கறிக்கைகள் இச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசியல் யாப்பின் 150 ஷரத்தின் 2வது பிரிவின் கீழேயே இக்கணக்கறிக்கை சபைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இப்படியான கணக்கறிக்கைகள் இந்திய பாராளுமன்றத்திலும் பல சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை சபைக்குக் கொண்டு வர முன்னர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளோம். அதன் பின்னரே பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்திலும் இது உள்ளடக்கப்பட்டது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக ஊடகங்களிலும் நிறைய செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க :-
இடைக்கால கணக்கறிக்கையை அரசியல் யாப்புக்கும், நிதி முகாமைத்துவ சட்டத்திற்கும் உட்பட்டுத்தான் கொண்டு வர முடியும். தனியே அரசியல் யாப்பின் 150 வது ஷரத்தை மாத்திரம் வைத்து இதனை கொண்டு வர முடியாது. 2003ம் ஆண்டின் 3ம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டம் 2003ம் ஆண்டில் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இச்சட்டத்தின் 26வது பிரிவின்படி இச் சட்டத்திற்கு அப்பால் செல்லவென தனியொரு பிரேரணையை சபைக்குக் கொண்டுவந்து சபையில் நிறைவேற்றி இருக்க வேண்டும். அது இங்கு செய்யப்படவில்லை.
சபாநாயகர் டப்ளியு. ஜே. எம். லொக்குபண்டார :-
இந்த கணக்கறிக்கை பிரேரணையாகவே சபைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 26வது ஷரத்தின் முதலாம் பிரிவின் கீழ் அவசர வேளைகளில் இவ்வாறு கொண்டுவர முடியும் என்றார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமைச்சர் கலாநிதி அமுனுகம இடைக்கால கணக்கறிக்கையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றத் தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சில ஐ. தே. க., எம்.பிக்கள் எழுந்து நின்றும், ஏனைய எம்.பிக்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்தபடியும் மேசை மீது தட்டி கூச்சல் குழப்பம் விளைவித்தனர்.
இந்நிலை சுமார் 40 நிமிடங்கள் சபை யில் நீடித்தது.
0 comments :
Post a Comment