Saturday, November 7, 2009

30 வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம்: முல்லை அரசாங்க அதிபர் இமெல்டா கூறுகிறார்

வன்னியில் முப்பது வருட காலத்திற்குப் பின்னர் முழுமையான சிவில் நிர்வாகத்தை சுதந்திரமாக நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் சிவில் நிர்வாகம் எதுவிதமான தலையீடுகளுமின்றி முழுமையாகத் தமது கட்டுப்பாட்டின்கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரச அதிபர் கூறினார்.

இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் ஆணித்தரமான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கேற்ப இராணுவத்தினருக்குத் தாம் வழிகாட்டல்களை வழங்குவதாகக் கூறிய அரச அதிபர் அவர்கள், பாதுகாப்புக் கடமைகளை மாத்திரமே மேற்கொள்வதாகக் கூறினார்.

வன்னியில் முன்பு சிவில் நிர்வாகத்தை மேற்கொள்கின்றபோது புலிகள் இடையூறு விளைவித்ததாகக் குறிப்பிட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா புலிகளின் அனுமதிபெற்றே எதனையும் செயற்படுத்த வேண்டுமென வலியுறுத்துவார்கள் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால், புலி உறுப்பினர்கள் வந்து வீண் தலையீடுகளைச் செய்வார்களென்றும் தெரிவித்தார்.

30 வருடகாலமாக அரச நிர்வாகத்தைப் புலிகள் சீர்குலைத்தார்களென்றும் தனது நிர்வாக செயற்பாட்டுக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தினார்களென்றும் கூறிய அவர், புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை. ஏனெனில் அரசாங்கம் வழங்கிய உணவுப் பொருள்களிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள். அதேநேரம், மக்கள் என்னோடு இருந்தார்கள். அதனால் புலிகள் என்னை அச்சுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, யோகபுரம் தமிழ் மகா வித்தியாலயம் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படுவதாக அரச அதிபர் கூறினார். மல்லாவி மத்திய கல்லூரியை மீளத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து 90% மக்கள் வெளியேறி சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர். அதேபோல் 60% சொந்த இடங்களில் குடியேறியுள்ளதுடன் உறவினர், நண்பர்களின் வீடுகளில் உள்ள மேலும் 40% மக்கள் மீளக் குடியமர உள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில் சுகாதாரத்துறை, கிராம சேவை அலுவலகம், பிரதேச செயலகம், கல்வித்துறை அலுவலகங்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மக்களின் அன்றாடத் தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளும்பொருட்டு உள்ளகப் போக்குவரத்துச் சேவைகளை நடத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.

இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்துக்குப் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் குறிப் பிட்டார். பஸ் சேவைகளை மேற்கொள்வது பற்றி யாழ்ப்பாணம் சாலைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பஸ் சேவைக்கான பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணுக்காய், மாந்தை கிழக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மேற்குப் பகுதி, ஜயபுரம், பூநகரி, முழங்காவில், நாச்சிக்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 22ஆம் திகதி மீள் குடியேற்றம் ஆரம்பமாகின.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com