‘சுதந்திரமான ஊடகத்தின் 10 ஆண்டுகள்’
மலேசியாகினி தனது 10 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில் விருந்தில் கலந்து கொண்ட சில முக்கியப் பிரமுகர்கள் மலேசியாகினியின் 10 ஆண்டு காலப் போராட்டம் பற்றியும் மலேசியாவின் சிரமமான ஊடக வடிவமைப்பில் சுயேச்சையான சுதந்திரமான ஊடகத்தை உருவாக்குவதில் அது முன்னோடியாகத் திகழ்வது குறித்தும் கருத்துரைத்தனர்.
முக்கிய பத்திரிக்கைகளுக்கு மாற்று ஊடகமாக மலேசியாகினி திகழ்வதாக அவர்கள் பாராட்டினர். நேர்மையான சமசீரான ஊடகத் துறைக்கு அந்த செய்தி இணையத் தளம் தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசார்
சுயேச்சையான மின்னியல் ஊடகத்தை உருவாக்குவதில் வெற்றி கிட்டியுள்ளது என்று நான் கருதுகிறேன்.முப்பதுகளில்( அப்போது) இருந்த இரண்டு இளைஞர்கள் முக்கிய ஊடகங்களுக்கு மாற்றாக சுதந்திரமான ஊடகத்தை தோற்றுவிப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.
தனிப்பட்ட முறையில் நானும் எனது குடும்பத்தினரும் சிலாங்கூர் அரசாங்கமும் அவர்களுக்கு மலேசியாகினி 10 வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் சேவியர் ஜெயகுமார், ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்
மிகவும் கோலாலமான நிகழ்வு. சிறந்த ஏற்பாடுகள்.10 ஆண்டுகளில் மலேசியாகினி வெகு தொலைவு கடந்து வந்துள்ளது. வெளிப்படையான சுதந்திரமான ஊடகத்தை உருவாக்குவதில் சமூகம் நீண்ட தொலைவு பயணம் செய்துள்ளது. தகவல்களை வெளியிடுவதில் மலேசியாகினி அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து துணிச்சலாக இயங்கும் என்று நான் நம்புகிறேன்.
எலிசபத் வோங் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர்
சிரமமான சூழ்நிலைகளில் இயங்கும் மலேசிய ஊடகங்கள் இணைய ஊடகத்தில் முன்னிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அது சுதந்திரமாகத் தகவல்களை வெளியிடுவதற்கு வழி வகுத்துள்ளது. மலேசியாகினி மேலும் 10 ஆண்டுகள் சிறப்புடன் இயங்க எனது வாழ்த்துக்கள். மலேசியாகினி ஊடக சுதந்திரத்திற்கும் வெளிப்படையான போக்குக்கும் நடத்தப்படும் போராட்டத்தில் முதன்மை வகிக்க வேண்டும்.
அமீர் முகமட், திரைப்படத் தயாரிப்பாளர் வெளியீட்டாளர்
மலேசியாகினி நல்வாழ்த்துக்கள். அடுத்த 10 ஆண்டுகள் அதற்கு மேலும் சிறப்பாக அமையட்டும். எதிர்வரும் ஆண்டுகள் சந்தா செலுத்தும் முறைக்கு உண்மையில் சிரமமான கால கட்டமாக இருக்கும். ஏனெனில் இலவசமாக நிறையக் கிடைக்கின்றன. முக்கிய ஊடகங்களில் கிடைக்காத புதுமையான அம்சங்களை தான் தொடர்ந்து வழங்கி வருவதை மலேசியாகினி உறுதி செய்ய வேண்டும்.
ஆர் சிவராசா சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர்
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு இணையத்தை பயன்படுத்துவதற்கு மலேசியாகினி ஊக்கமளித்துள்ளது. மலேசியாவில் அதிகமான பத்திரிக்கை சுதந்திரம் இருப்பதாக அதனால் பொருள் கொள்ளக்கூடாது. காரணம் அந்த இணையத் தளங்கள் அதே கட்டுப்பாடுகளுக்கு இடையில் தான் இயங்கி வருகின்றன. அரசியல் மாற்றம் ஏற்பட்டால் தான் உண்மையான ஊடகச் சுதந்திரம் கிடைக்கும்.
ஒ தொங் கியோங் கெரக்கான் இளைஞர் பிரிவுத் தலைவர்
மலேசியாகினியின் 10 வது ஆண்டு நிறைவில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மலேசியாகினி நீண்ட தொலைவைக் கடந்து வந்துள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கு நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்
தகவல், தொடர்பு, பண்பாட்டு துணை அமைச்சர் ஹெங் சியாய் கீ
மலேசியாவில் அதிகமான வாசகர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க மலேசியாகினிக்கு எனது வாழ்த்துக்கள். விருந்தில் கலந்து கொண்டவர் எண்ணிக்கையும் ஆதரவும் அதனை உறுதிப்படுத்துகிறது. சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கு ஊடக நெறிமுறைகளுக்கு இணங்க மலேசியாகினி தனது கடமைகளைச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.
அந்த விருந்தினர்களுடன் பிஜே உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் மாணிக்கவாசகம், ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் சமாட், பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என் கோபாலகிருஷ்ணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ ஆகிய பெருமக்களும் விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.
“உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் அதனை செய்திருக்க முடியாது”
10 ஆண்டுகள் நிறைந்துள்ள மலேசியாகினி நிதி அடிப்படையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உதவும் ஆயிரக்கணக்கான சந்தாதாரர்களுக்கு அதன் கூட்டு நிறுவனர்களான ஸ்டீவன் கானும் பிரமேஷ் சந்திரனும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாராவில் அமைந்துள்ள சைம்டார்பி மாநாட்டு மண்டபத்தில் மலேசியாகினியின் 10 வது ஆண்டு நிறைவு விருந்தில் பேசிய கான், “சுதந்திரமான ஊடகத்திற்கு நிதி சுதந்தரம் அவசியம்” என்பது நிறுவனர்களின் எழுதப்படாத சுலோகம் என்று கூறினார்.
உலகில் இரண்டு செய்தி இணையத் தளங்கள் மட்டுமே சந்தா செலுத்தும் முறையில் வெற்றி கண்டுள்ளன. அவற்றில் ஒன்று மலேசியாகினி ஆகும். இரண்டாவது வால் ஸ்டீரிட் சஞ்சிகை என்று அவர் தகவல் வெளியிட்டார்.
அவர் மலேசியாகினியின் தலைமை ஆசிரியரும் ஆவார்.
“நியூயார்க் டைம்ஸின் இணையத் தள ஆசிரியர் கோலாலம்பூருக்கு வந்து நாங்கள் பின்பற்றுகிற வர்த்தக முறையை அறிந்து சென்றார். நிச்சயமாக நாங்கள் செய்வது சரியாக இருப்பதால் தான் அவர் இங்கு வந்தார்.”
” நாங்கள் ஒவ்வொரு மாதமும் மலேசியாகினியை படிப்பதற்கு 20 ரிங்கிட்டை வழங்கும் சந்தாதாரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.”
மலேசியாகினி சந்தாதாரர்கள் “இலவசமாக செய்திகளை வழங்கும் முறைக்கு எதிராக தங்களது பணப்பைகளை பயன்படுத்தி வாக்களித்தனர்,” என்று தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.
“இரண்டு மில்லியன் வாசகர்களுக்கு நான்கு மொழிகளில் 2000 வீடியோக்களும் 117,000 ஆயிரம் செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன. மலேசியாகினியைத் தொடங்கிய நாளில் இவ்வளவு தொலைவுக்கு செல்வோம் என்று நாங்கள் எண்ணவில்லை”, என்று அவர் குறிப்பிட்டார்.
“உண்மையில் அதன் நிறுவனர்கள், ஊழியர்கள் மற்றும் எங்களுடன் நம்பிக்கை வைத்து இணைந்தவர்கள் ஆகியோரது எதிர்பார்ப்புக்களையும் மலேசியாகினி மிஞ்சி விட்டது.”
“மலேசிய ஊடக வரலாற்றில் துணிச்சல் மிக்க சில ஆண்களும் பெண்களும் சுதந்தரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இவ்வளவு பாடுபட்டதில்லை”, என்று பிரபல அறிஞரான டின் மரைக்கான் தமது வலைப்பதிவில் கூறியிருப்பதை சந்திரன் மேற்கோள் காட்டினார்.
நீலக் கடல் செம்மை நிறத்திற்கு மாறுகிறது
10 வது ஆண்டு நிறைவு ” மலேசியாகினி வரலாற்றில் முதலாவது காலகட்டத்தை முடித்து வைப்பதாக”, சந்திரன் குறிப்பிட்டார்.
“அபாயகரமானதாக இருந்த நீலக் கடல் புதிய செய்தி இணையத் தளங்கள் புதிதாகத் தோன்றுவதின் வழி இப்போது செம்மை நிறக் கடலாக மாறியுள்ளது.”
“முதலாவது கால கட்டம் பகைமையான கடலில் கப்பலை கட்டுவதாக இருந்தது. இரண்டாவது கால கட்டம் அந்தக் கப்பலை போட்டிகளுக்கு இடையில் செலுத்துவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்கி புதிய சந்தாதாரர்களை தேடுவதாக இருக்கும்”, என்றார் அவர்.
“நாங்கள் அதே உத்வேகத்துடன் கைத்தொலைபேசி, இணையத் தொலைக்காட்சி போன்றவற்றில் இறங்கவும் தயாராகி வருகிறோம்.”
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களில் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களில் சிலாங்கூர் மந்திரிபுசார் காலித் இப்ராஹிம், சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தகவல், தொடர்பு, பண்பாட்டு துணை அமைச்சர் ஹெங் சியாய் கீ ஆகியோரும் அடங்குவர்
0 comments :
Post a Comment