Thursday, October 8, 2009

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு பிரதமர் வாழ்த்து

உலகிலேயே மிகப் பெரிய விருதான நோபல் பரிசு, தமிழ்நாட்டை சேர்ந்த வேதியியல் துறை விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- நீங்கள் வேதியியல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் வகையில் தங்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது. நீங்கள் பெற்ற விருது மூலம், இந்தியாவில் கல்வித் தரம் சிறப்பாக இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்களின் ஆராய்ச்சி மென் மேலும் தொடர வாழ்த்துகிறேன். நீங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, உயிரி மூலக்கூறு சம்பந்தமாக பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்விற்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். அறிவியல் சம்பந்தமாக பலவிதமான ஆய்விற்கும், மருத்துவ அறிவியல் உலகிற்கும் பல புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கும் தங்களின் ஆராய்ச்சி பயனுள்ளதாக அமையும். தங்கள் ஆராய்ச்சி, மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்.

அமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர்.சி. மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார். இவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டீன்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி யோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டுபிடிப்புக்காக 2009ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

இச்செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனை மனமாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.இராமன், சந்திரசேகர் ஆகிய இரண்டு விஞ்ஞானிகளை அடுத்து, மூன்றாவது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச்சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்வர் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com