Saturday, October 3, 2009

தீர்வில் இணக்கம் இல்லாமல் ஒற்றுமைப் படுவதால் பலன் இல்லை. சுரேஷ் நாகேந்திரா

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக முன்வைக்கப் படுகின்றது. இக் கோரிக்கையை வேறு கட்சிகளும் முன்வைக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூடுதலாக வலியுறுத்துகின்றார்கள்.

புலிகள் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்குத் தடையாக இருந்தார்கள் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். அதனாலேயே புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால், என்ன அடிப்படையில் அந்த ஒற்றுமை இடம்பெற வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடிப்படைக் கொள்கை உடன்பாடு இல்லாமல் இடம்பெறும் ஒற்றுமை சந்தர்ப்பவாத அணிசேர்க்கையாக இருக்குமேயொழிய ஆக்கபூர்வமான ஐக்கியமாக அமையாது.

அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு எல்லா விடயங்களிலும் உடன்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் உடன்பாடு காண முடியாததாலேயே தனித்தனிக் கட்சிகளாகச் செயற்படுகின்றன. பிரதானமானதாகக் கருதப்படும் ஏதேனுமொரு விடயத்தில் காணப்படும் உடன்பாட்டின் அடிப்படையிலேயே கட்சிகளுக்கிடையே ஐக்கியமான செயற்பாடு இடம்பெற முடியும்.

அப்படியான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது வெகுஜன விருப்புவாதக் கோஷமாக (populist slogan) அமையுமேயொழிய கருத்தீடுபாட்டு அணுகுமுறையாக இருக்காது.

கடந்த காலங்களில் பெரிதாகப் பேசப்பட்ட இரண்டு கூட்டுகளைக் கண்டிருக்கிறோம். ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்விரு கூட்டுகளும் அடிப்படைக் கொள்கையில் இணக்கப்பாட்டுடன் ஆரம்பிக்கப்படவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பின்னரே இனப்பிரச்சினையின் தீர்வுக்கான அதன் கொள்கையைத் தீர்மானிக்கும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. தனிநாடு தான் தீர்வு என்ற முடிவை மேற்கொண்டதும் தொண்டமான் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான கொள்கைத் தெளிவும் இல்லாமல் இடம்பெற்ற கூட்டு. பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதில் மாத்திரம் இவர்களுக்கிடையே உடன்பாடு இருந்தது.

அதுவும் எல்லாக் கட்சிகளும் ஆரம்பத்திலிருந்து இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி கடைசி நேரத்திலேயே அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தது. அவசரமாகக் கூட்டுச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இணக்கப்பாடு இருக்கவில்லை.

தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகப் பேசினார்கள். இக்கூட்டமைப்பின் வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டைத் தவிர வேறு தீர்வு இல்லை என்று பகிரங்கமாகக் கூறினார்கள். இந்த முரண்பாடு இறுதி நேரம் வரை நீடித்தது.

மேலே குறிப்பிட்ட இரண்டு கூட்டுகளும் அவற்றின் தலைவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்வதை இலகுபடுத்தினவேயொழிய அவற்றினால் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. துன்பங்களே ஏற்பட்டன.

இதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம். அடிப்படையான பிரச்சினையின் தீர்வில் இணக்கம் இல்லாமல் கூட்டுச் சேர்ந்தது ஒரு காரணம். யதார்த்தத்துக்கு முரணானதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான தீர்வை முன்வைத்தது மற்றைய காரணம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுத் தீர்மானம் இத்தகையது.

இன்றைய நிலையில் இனப்பிரச்சினை தான் தமிழ் மக்களுக்கு அடிப்படையானதும் பிரதானமானதுமான பிரச்சினை. இப்பிரச்சினையின் தீர்வு பற்றிய உடன்பாடு இல்லாமல் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதில் அர்த்தமில்லை.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலாக வலியுறுத்துகின்ற போதிலும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக் கொள்கை இதுவரையில் இக் கட்சியிடம் இல்லை. தீர்வுக்கான கொள்கை தயாரிக்கப்படுகின்றது என்று சொல்கின்றார்களேயொழிய அதை இன்னும் வெளிப்படுத்தவில்லை.

மற்றைய தமிழ்க் கட்சிகள் தங்கள் கொள்கையைப் பகிரங்கப் படுத்தியிருக்கின்றன. மேலும், இக் கட்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே முக்கியமான ஒரு வேறுபாடும் உண்டு. பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து முழுமையான தீர்வை அடைவதற்கு முயற்சிப்பதே நடைமுறைச் சாத்தியமானதும் ஆக்கபூர்வமானதும் என்ற நிலைப்பாட்டை இக் கட்சிகள் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிக்கின்றது.

தீர்வுக்கான அணுகுமுறையைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளுக்குமிடையே உடன்பாடு இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமைக்காக விடுக்கும் அழைப்பு அர்த்தமற்றது. இனப் பிரச்சினைக்கு இறுதியான அரசியல் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படும் நிலையிலேயே ஒற்றுமை பலனளிப்பதாக அமையும்.

இல்லாவிட்டால் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றன என வெளியுலகுக்குக் காட்டுவதற்கான கூட்டாக இருக்குமேயொழிய அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. இந்தக் கூட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினை விடயத்தில் உடன்பாடு காண்பதற்கு முயற்சிக்காமல் ஒற்றுமைக் கோரிக்கையை முன்வைப்பது வெளித்தோற்ற ஒற்றுமையையே அது விரும்புகின்றதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிய கொள்கை எதிர்மறையானது. பிரச்சினையின் தீர்வுக்கேற்ற கொள்கையை அது பின்பற்றவில்லை. புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே கூட்டமைப்பு செயற்பட்டது. தனிநாட்டை ஆதரிக்கவில்லை என்று கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கிடை கூறிய போதிலும் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபடவோ அல்லது அம் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கவோ அவர்கள் முன்வரவில்லை. புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மெளன ஆதரவு அளிப்பவர்களாகவே செயற்பட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு உடன்பாடு இல்லாதவர்களும் இருந்தார்கள். இலங்கை அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காணும் நோக்கம் இரு பிரிவினருக்கும் இருக்கவில்லை. வெளிநாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் அழுத்தத்துக்கூடாகத் தீர்வை அடையலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள்.

இதனாலேயே இலங்கை அரசாங்கத்தின் அழைப்புகளையெல்லாம் நிராகரித்து வெளிநாடுகளின் தூதுவர்களையும் வெளிநாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்கள். வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் இராணுவ நடவடிக்கையைத் தளர்த்தும் பட்சத்தில் புலிகள் ஆயுத பலத்தின் மூலம் தனிநாடு அமைப்பார்கள் என்ற நம்பிக்கை பிரிவினைவாதிகளுக்கு இருந்தது.

வெளிநாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்து அரசாங்கம் நியாயமான அரசியல் தீர்வொன்றை நடைமுறைப்படுத்த முன்வரும் என்று பிரிவினைக்கு உடன்பாடு இல்லாதவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் வெளிநாடுகளின் பங்களிப்பும் முக்கியமானதெனினும் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையே பிரதானமானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கடந்தகால நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டதாக இன்னும் அறிவிக்கவில்லை. அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை கூட்டமைப்புக்கு இருக்குமேயானால் அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

தனிநாட்டுக் கொள்கையைக் கைவிடுவதாகத் தெரிவிக்க வேண்டும். அரசியல் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றை வெளியிட வேண்டும். இவற்றுள் எதையும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லை. இந்த நிலையில் ஒற்றுமைக் கோரிக்கையை முன்வைப்பது பழைய பாணியில் வெளிநாடுகளில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவதற்காகவா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுவது நியாயமானதே.

அடிப்படை உடன்பாடு இல்லாத ஒற்றுமையின் மூலம் தமிழ்க் கட்சிகள் ஐக்கியப் பட்டுவிட்டன என்று வெளியுலகுக்குக் காட்டலாமேயொழிய அதனால் எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாது.

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவென்றால், அரசியல் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் உடன்பாடு காண்பதே முதலில் செய்ய வேண்டியதாகும். அத்தகைய உடன்பாடு இல்லாத ஒற்றுமை இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் புறம்பாக வேறேதோ நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்க முடியும்.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அழைப்பு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பிரதான இலக்காகக் கொண்டுள்ளதென்றால், அரசியல் தீர்வு பற்றியும் அதை அடைவதற்கான அணுகுமுறை பற்றியும் உடன்பாடு காண்பதற்கான கருத்துப் பரிமாறலை முதலில் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com