Thursday, October 8, 2009

வாதத்துக்காக பேசாமல், வாழ்க்கையை பேசுவோம். - யஹியா வாஸித் -

காட்சி - 1 அந்த சகோதரி முந்தா நாளுக்கு முதல்நாள்தான் சிறிலங்கா என்கின்ற அந்த கந்தக பூமியை தரிசித்துவிட்டு வந்திருந்தார். அவருடைய கணவரின் ஒரேயொரு சகோதரர் வன்னியில் ஏற்பட்ட மிதிவெடி மிதிப்பில் காலை இழந்ததால் அவரை கொழும்பு ஆசுபெத்திரியில் வைத்திருப்பதாக செய்தி கசிந்து “ சிங்களவன் கொன்றால் கொண்டு போடட்டும்” என்ற ஒரு மன அழுத்தத்தில் அண்ணனைப் பார்க்க கணவனும், மனைவியும் பதின் மூன்று வருடத்தின் பின், கைகுழந்தையுடன் சிறிலங்கா சென்று வந்திருக்கின்றனர்.

அக்கா எப்படி அக்கா சிறிலங்கா இருக்கின்றது. வவுனியாயில் சிங்கள இராணுவம் கொடுமை புரிகின்றதாமே ? எப்படி அக்கா போய் தப்பி வந்தீர்கள். கொழும்பு போய் ஆறுநாட்கள் தங்கியிருந்தோம். எயார்போர்ட்டில் எங்கள் பெட்டிகளை திறக்கவேயில்லை. நேரடியாக அங்கிருந்து கொழும்பு போய் ஒட்டலில் றூம் எடுத்து தங்கினோம். யாரும் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. ஆறுநாட்களும் தொடர்ந்து ஆசுபெத்திரிக்குப்போய் அண்ணனைப் பார்த்தோம். ஆட்டோவில்தான் சென்றோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஆட்டோவை ராணுவத்தினர் நிறுத்தி எங்கே போகின்றீர்கள் எனக்கேட்டனர். ஆசுபெத்திரிக் கென்றதும் பாஸ்போட்டுகளைக் கூடப்பார்க்காமல் போகச் சொன்னார்கள்.

( கொழும்பில் என்னன்னவோ கொடுமைகள் தமிழ்பேசும் தமிழருக்கு நடப்பதாக இங்கு பழைய பஞ்ஞாங்கக்காறர்கள் கூப்பாடு போடுகின்றார்களே என்ற வாதத்தை நான் அந்த தாயிடம் வைக்கவில்லை. அவர், அந்த தாய் வாழ்க்கையைப் பேசினார் )

அப்புறம் வவுனியாவில் எப்படி சிங்கள இராணுவத்தின் கொடுமைகளை சகித்தீர்கள் எனக் கேட்டதும். அருணாச்சலம் முகாமில் அவருட தங்கையும், அம்மாவும் இருக்கினம். தனிக்காட்டுக்குள்ள வளச்சி முள்ளுக்கம்பி வேலியடைச்சி அவங்கள வச்சிருக்கினம். முதல்நாள் போய் பெயரைப்பதிந்துவிட்டு ரெண்டு மணிநேரம் காத்திருந்தோம். வேகாதவெயில். இரண்டுமணி நேரத்தின் பின் பார்க்க விட்டார்கள். தங்கச்சி முள்ளுக்கம்பி வேலிக்கு அப்பாலும் நாங்கள் இங்காலும் இருந்து கதைச்சம். கிட்டத்தட்ட நாலடி இடைவெளி. எந்த பொருளும் கொடுக்க முடியாது. வேலிக்கு மேலால் விரும்பினால் கொடுக்கலாம். 20 நிமிடம் வரை கதைக்கலாம் என ஆமிக்காறன் சொன்னான். நாங்கள் 30 நிமிடம் கதைத்தோம். ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கினம். ஆனால் வீட்டுக்குப் போய் கஞ்சோ, கூழோ குடிப்பதுபோல் இல்லை எனச் சொன்னார்கள்.

( முள்ளுக்கம்பி வேலிகளுக்கருகில் மகின்தவின் வெறிபிடித்த இராணும் துப்பாக்கியும் கையுமாக இருந்து பழயங், பழயங் என பார்வையாளர்களை விரட்டுவதாக அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் சொல்லுகின்றார்களே, இலவச ரிவீ போட்டு 24 மணிநேரமும் முழங்குகின்றார்களே என்ற வாதத்தை அந்த தாயிடம் நான் வைக்கவில்லை. அவர், அந்த தாய், தன் சகோதரியின் வாழ்க்கயைப் பேசினார்.)

வவுனியாவில் நீங்கள் ஏழெட்டு நாட்கள் நின்றதாகச் சொன்னீர்களே. ஓமோம். அடுத்த நாளும் பார்க்கப் போனோம். அடுத்த நாள் சாப்பாடு, துணிகள், இன்னும் சில பொருட்கள் எடுத்துச்சென்று கொடுத்தோம். கிட்டத்தட்ட 45 நிமிடம் கதைத்தோம். அந்த முகாமுக்கு பொறுப்பானவரிடம் போய் நாங்கள் 13 வருடத்தின் பின் சிறிலங்கா வந்திருக்கின்றோம். எனது குழந்தையை என்தாய் தூக்கி வைத்திருக்க விரும்புகின்றார் என்றதும் “ வைநொட். யுகென் கோ அன்ட் ஸ்ரே வித் யுவர் மதர் என் வண் ஹவர்” என அனுமதியும் தந்து எங்களை அவர்ர தாயுடன் ஒரு மணிநேரம் கதைக்கவும் விட்டார்.

( அக்கா,அக்கா என்னக்கா பச்சப்பொய்யாச் சொல்லுறியள். இஞ்ச எல்லாச்சனலும், எல்லா இணையத்தளமும் சிங்களவன் தமிழச்சிகளை கற்பழிச்சிக் கொண்டிருக்கின்றான், என புலன் பெயர்ந்தவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறது என்ற வாதத்தை நான் வைக்கவே இல்லை. அவர், அந்தத்தாய் 13 வருடத்துக்கப்புறம் தான் தரிசித்த சிறிலங்கா வாழ் தமிழரின் இன்றைய வாழ்க்கையைச் சொன்னார் )

அப்புறம் றிங்கோ போய் ஆறு நாட்கள் நின்று விட்டு வந்தோம். எப்படி போற வழிகளெல்லாம் இருக்கின்றது. எத்தனை இடத்தில் ராணுவம் செக் பண்ணியது என நான் கேட்டதும். எங்கேயும், எந்த இடத்திலும் எங்களை இறக்கவில்லை. எங்கள் வேனை நிற்பாட்டி எங்கே போகின்றீர்கள் என ஒரே ஒரு இடத்தில் மட்டும் கேட்டார்கள். றிங்கோ போறம் என்றதும் விட்டுவிட்டார்கள்.

( தமிழர்களை இறக்கி பொருட்களை பறிப்பதுடன், தாறுமாறாக விரட்டுவதாகவும் செய்திகள் றெக்கைகட்டி புலம்பெயர் நாடெல்லாம் பறக்கிறதே. இந்தச் செய்திகளை கேட்காமலே சிறிலங்கா போய் வந்திருக்கிறாயே முட்டாள் பெண்ணே என்ற வாதத்தை நான் அவளிடம் வைக்கவில்லை. அவர் எதிர்கால சிறிலங்காவில் அனைவரும் ஒற்றுமையாக வாழலாம் போல இருக்கின்றது என்ற வாழ்க்கையைச் சொன்னார்.)


காட்சி – 2 அவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்தவர். கொழும்பில் பிரபல வியாபாரி பிளஸ் ஏற்றுமதியாளர். அவரது பொருட்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என மாதத்துக்கு ஆறு கன்டய்னர்கள் ஏற்றுமதியாகின்றன. அண்மையில் கொழும்பில் உள்ள இன்னொரு வியாபாரத்தை வாங்குவதற்காக பேரம் நடந்தது. இறுதியில் பத்து கோடி ரூபாவுக்கு வியாபாரம் பேசி முடிக்கப்பட்டது. இவரது வங்கி ஆறு கோடி ரூபா கடன் தருவதாக வாக்களித்தது. மீதி நாலூ கோடி ரூபாவுக்காக எங்கெங்கோயோ அலைந்தார். இறுதியில் அப்பணமும் கிடைத்து, வியாபாரம் கடந்த ஒண்ணரை மாதமாக களை கட்டுகின்றது.

( சிறிலங்கா பொருட்களை வாங்கக் கூடாது என, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளார்களே, நாளை மறுதினம் மார்க்ஸ்பென்சருக்கு முன்னால் கைகோர்க்கப் போகின்றார்களே, உங்கள் பொருட்கள் விலைப்படாமல் திரும்பப் போகின்றதே என்ற வாதத்தை நான் அவர் முன் வைக்கவில்லை. அவர் வாழ்க்கை நடாத்த வாழ்க்கையுடன் போராடுகின்றார் )

அந்த பிஸினசை நாங்கள் எடுத்துட்டம், உங்கள் உதவிக்கு நன்றி. வாங்கோ ஒரு பார்ட்டி போடுவோம் என நீர்கொழும்பிலுள்ள சீபூட் ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்றார். சீபூட் பிளஸ் தண்ணிப்பாட்டி. ஓல்ட் அரக் தலைக்கேறியதும், சேர் எல்லாம் போய், மச்சான் பாணியில் பேச்சுக்கள் தொடர்ந்தது. நாலு கோடி ரூபா எங்கிருந்து மச்சான் புரட்டி எடுத்தயள். அது நம்மட சின்ன சால்வட பிரண்ட் ஒரு மினிஸ்டரிடம் வட்டிக்கு எடுத்தோம் மச்சான். ரொம்ப நல்லவங்க மச்சான். வந்தான் நம்முட பிஸினஸை பார்த்தான். அடுத்த நாள் நாலு கட்டாக நாலு கோடி ரூபாவ கொண்ணார்ந்து தந்தான் மச்சான். ரொம்ப நல்லவனுகள் மச்சான். சிங்களவன் சிங்களவன்தான் மச்சான்.

( கோழி மிதித்து குஞ்சு முடமாவதில்லையாம். இங்கு யார் கோழி. யார் குஞ்சு என்ற வாதத்தை நான் அவரிடம் வைக்கவில்லை. அவர் மொத்த சிறிலங்கா மக்களினதும் வாழ்க்கையைப் பேசினார் – மைனஸ் புலம் பெயர் சகோதர, சகோதரிகள் )

ஓல்ட்அரக் தலைக்கேறி முட்டி போட்டுக் கொண்டு வேனுக்குள் ஏறி வெள்ளவத்தை வந்து சேரும் போது அதி காலை மூன்று மணி. காலையில் எழுந்து சாப்பிட்டுவிட்டு டைனிங் றேபிளில் ஒரு குட்டி டிஸ்கஸன். மே 17 வன்னியில் என்ன நடந்ததப்பா. என்ன நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. தலைவர் சேப்டியாக தலைமறைவாகி விட்டார். வருவார். வந்து எல்லாவற்றுக்கும் ஒரு பாடம் புகட்டுவார். அந்தாள் என்ன சும்மா சோப்ளாங்கியா என வாதத்தை தொடங்கினார். நான் போயிட்டு வாறன் எனக் கூறிவிட்டு வாழ்க்கயைத் தேடி புறப்பட்டேன்.

8-10-2009


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com