புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனத்தினரின் கருத்தரங்கு சிறப்பாக நிறைவேறியது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை என்பன தமிழர் தேசத்தை மாசுபடுத்த திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டவை என்றார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்வு குறித்தும், இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் சமஉரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்தும், புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் கடமைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு சுவிற்சர்லாந்து புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.
சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் உட்பட பலர் சொற்பொழிவாற்றினர். அங்கு பேசிய அனைவரும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயரங்கள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன் அவற்றுக்கு மாற்றீடாக செய்யக்கூடிய விடயங்களையும் எடுத்துரைத்தனர்.
அங்கு சிறப்பு பேச்சாளாராக கலந்து கொண்ட பேராசியர் கா.சிவத்தம்பி இலங்கையின் வடக்கே அமைக்கப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை மற்றும் இரசாயனத் தொழிற்சாலை என்பன சிங்கள அரசாங்கங்களால் திட்டமிட்டமுறையில் தமிழர் தேசத்தை மாசுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டவை எனவும் அவற்றை அங்கு தொடர்ந்தும் இயங்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பேராசிரியரின் கருத்தில் அங்கிருந்த பெரும்பாலானோர் அதிருப்தியடைந்திருந்ததை காண முடிந்தது. அத்துடன் புலிகளின் மறைத்த நிகழ்சி நிரலின் செயற்பாட்டாளர்களின் ஒருவரான குறிப்பிட்ட பேராசிரியர், புலிகளின் அழிவிற்கு பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் அரசினால் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்திகளில் மக்களை அச்சம் கொள்ளச் செய்வதற்கு தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வருவதை இக்கருத்து உணர்த்துகின்றது.
அவரைத் தொடர்ந்து பேசிய திரு. அழகுகுணசீலன் அவர்கள், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, தொலை நோக்கு சிந்தனை போன்ற விடயங்கள் அடிப்படையில் இருந்து எம் மக்களுக்கு புகட்டப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பேசியதுடன், முதற்கட்டமாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இலங்கையிலே எல்லைப் புறங்களிலே வாழுகின்ற மக்களிடையே உருவாக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடைய மேற்குறிப்பிட்ட கருத்தை தான் வலுவாக எதிர்பதாக தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கான சுதந்திரப்போராட்டம் எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தினை புலிகள் இயக்கம் தமிழ் மக்களை ஆழும் ஆயுதமாக மாற்றிக்கொண்டதற்கும், புலிகளின் மனிதகுலத்திற்கு எதிரான சகல செயற்பாடுகளுக்கும் யாழ் பல்கலைக்கழகம் துணை நின்று வரலாற்றுத் துரோகம் இழைத்திருக்கின்றது என்றார். அத்துடன் பேராசிரியரின் குறிப்பிட்ட கருத்தானது இனவாதத்தை துண்டுவதும், உண்மைக்கு புறப்பானதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் என்ற பொருள்பட கூறிய அவர், புலிகள் கடந்த காலங்களில் தாம் மேற்கொண்ட ஒவ்வொரு கொலைகளுக்கும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களையே கூறிவந்துள்ளனர் என்றார்.
திரு அழகுகுணசீலன் அவர்களின் கருத்தினை ஆதரித்து கருத்துக்கூறிய திரு. ஜெகநாதன், தனது சிறுபிராயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னப்பலம் அவர்களின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களைச் செவிமடுத்துள்ளதாகவும், அதன்போது ஜி.ஜி. பொன்னப்பலம் அவர்கள் மேற்குறிப்பிட்ட இருதொழிற்சாலைகளையும் தான் இலங்கைச் சிங்கள அரசிடம் மிகவும் சண்டையிட்டு, தமிழ் மக்களின் நலனிற்காக நிறுவியதாகவும் தெரிவித்திருந்தது ஞாபகம் இருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில் குறிப்பிட்ட இரு தொழிற்சாலைகளும் சிங்கள அரசினால் திட்டமிட்ட முறையில் தீய நோக்குடன் நிறுவப்பட்டது என்ற கருத்து அடிப்படையில் அதாரமற்றது எனக் கூறினார்.
அத்துடன் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பொறியலாளராக கடமையாற்றியதாக தன்னை அறிமுகம் செய்து கொண்ட திரு. அஜீவன் அவர்கள் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பல உண்டு எனக் கூறி, அவற்றை தொழில் நுட்ப ரீதியாக விரிவாக விளக்கினார்.
மேலும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் கைதுசெய்யப்பட்ட, சரணடைந்த புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு வந்திருந்தோர் தாம் அங்கிருந்து எடுத்துவந்திருந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிளை காண்பித்தனர். அவற்றில் சில விடியோக்கள் இங்கே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment