Saturday, October 3, 2009

சின்னஞ் சிறு அனாதைகளும் சில கேள்விகளும் - இனியவன் இஸாறுதீன் -

ஆதியில்
ஆதாம்ஏவாள் இணைந்த
இல்லறத்தோட்டம் நம்
இலங்கைத் தோட்டமாம்
ஆனால்
அது ஏனின்று
பிணக்காடானது பிரபாகரன் மாமா?

கனவுகள்...
ஆமாம்
எமது கனவுகளைத்தான்
கொலை செய்தீர்கள்
கொலை என்றால்
உங்களுக்கு
கோடி இன்பமா?

கோடி மக்கள்
குருதியில்தான்
கொள்ளை ஆசையா?

எங்கு நோக்கினும்
அப்பாவி மக்களின்
இரத்தச்சுவடுகள்
உங்கள் ஆயுதங்கள்
அமைதிப்புறா பற்றி
அறிந்ததேயில்லையா?

நந்திக்கடல் வான் பார்த்தால்
அதன் முகம் நீலம்தான்
ஆனால்
அது
சிவப்பானதெப்படி
செப்புங்கள் மாமா?

இழப்பின் சோகம்
விழிகளில் எரிய
எதைத் தேடிப் பார்க்கின்றீர்
எம் கண்களில்?

விழிகளில் வழிவது
நீரென்று நினைக்காதீர்
அது
உங்கள்
அராஜகம் தந்த
அனாதைகள் முகவரி...

பல்லாண்டு காலமாய்
பகிர்ந்துண்ட மக்களின் குருதியை
பாலாபிஷேகம் செய்தீர்களே
உங்களுக்கு
'இரத்த ஒருமைப்பாட்டாளர்' என்ற
விருது தந்து
அஞ்சலி செய்கிறோம் ...

புரட்சி என்ற பாற்கடல்
உங்கள் அக்கிரமத்தால்
ஆலகாலமானது.
வருங்காலத் தலைமுறையினர்
அமைதி பாழானது.

விடியல் என்பது
விடிவதில் இல்லை
நாம்
விழிப்பதில் இருக்கிறது..
விடுதலை என்பது
வன்மத்தில் இல்லை
நம்
தர்மத்தில் இருக்கிறது..

நீங்கள்
திரித்து எழுதிய வரலாற்றை
இனி
திருத்தி எழுதப்போவது
யார் மாமா?

கனவுகள் சுமந்து
பூமிக்கு வந்தோம்
சமாதான ஒலி கேட்க
இலங்கையில் பிறந்தோம்..

ஆனால்
உங்கள் ஆயுதங்களின் பண்டிகையில்
அவலம் பார்த்துச் சிரிக்கவா
நாம் பிறந்தோம்?

உங்கள் ஈழத்துப் போரை
இனவாதத்தை
இனப்படுகொலையை
ஈமக்கிரியையில்லாமல்
சிதறிய உடல்களை
பெற்ற தாய்க்கும்.. பிறந்த தாய்நாட்டுக்கும்
செய்த கொடூரத்தை
நாம் எப்படிச் சகிப்போம்?

ஜனங்களைக் கொல்வதற்கு
நீங்கள் இட்ட பெயர்
ஜனநாயகம்..
(மனித)வேட்டை மிருகங்களுக்கு
ஜனங்கள் இட்ட பெயர்
புலிஅகம் ..

அதாவது
மனிதத்திற் கெதிரான
மிரு(அ)கம்
மனித வெடிகுண்டுகளால்
தாயகத்தையும்
தாய்நாட்டவர்ளையும் அல்லவா
அழித்தீர்கள்..

பயங்கரவாதிகளை
தேசியவீரர்கள் என்றுதான்
அழைத்தீர்கள்
ஓன்று தெரியுமா உங்களுக்கு?

பறவை ஒன்று
தன் சிறகு கொண்டு
தானே சிக்கெடுப்பது மாதிரி
நமக்கு நாமே தீர்வு காணும்
சித்தம் வேண்டும்..

தானியங்கிக் கடிகாரம்போல்
மனித வாழ்வு
சீராக இயங்கவேண்டும்..

வல்வெட்டித்துறையில்
கடத்தத் தொடங்கி
வன்முறையில்தானே
முடித்தீர்கள் வாழ்க்யை..

தமிழர் குருதியென்றால்
தனி ருசிதான்
தமிழீழத்தில் தீர்ந்ததா
உங்கள் தாகம்?

கோடித்தமிழர் கொள்ளைப்பணத்தில்
கொலையாயுதங்கள்தானே
கொணர்ந்தீர்கள்
அதில்
எங்களுக்கு
கல்விக்கூடமா திறந்தீர்கள்?

வாழ ஆசைப்பட்டவர்களை
சாவில் துயில வைத்தீர்கள்
குடிசைச்சிறுவர்கள்
கல்விமானாகிவிடக் கூடாது என்றுதானே
கல்லறைக்குள் நுழைத்துவிட்டீர்கள்

கந்தக சுவாசம்....
கானக வாசம்....
கந்தல் உடை....
பசியின் வலி....
பிரிவுத் துயர்...
கொலைகளின் கொடூரம்....

இவைகளைத்தானே
எங்களுக்கு
வாழ்க்கையாக்கினீர்கள்
வானத்தைச் சூழ்ந்த
வெடிகுண்டுப் புகைபோல
எங்கள் இதயத்தைச் சூழ்ந்தது
உங்கள் வன்மத்தின் சோகம்!

புத்தகம் படிக்காமல்
துப்பாக்கி பிடித்த
உங்கள்
அறிவிலி 'மிருகம்'
அறியுமா மனிதம்?

இழப்பின் சோகம்
விழிகளில் எரிய
எதைத் தேடிப் பார்க்கின்றீர்
எம் கண்களில்?

விழிகளில் வழிவது
நீரென்று நினைக்காதீர்
அது
உங்கள்
அராஜகம் தந்த
அனாதைகள் முகவரி ..

விடுதலை எனும் பெயரில்
கெடுதலை செய்தீர்கள்
அதனால்தான்
உங்கள் அறிவிலி
அணு(கு)முறை
உங்களுக்கே
அணுகுண்டானது ..

அறியுங்கள்
தர்மம்தான் வென்றது
உங்கள் அதர்மம் கூட
உங்களைத்தான் கொன்றது
எங்கள் சமாதானம்
ஒரு சமாதியானது
உங்கள் இனவெறி
இராணுவமானது
ஒவ்வொரு நாளும்
உங்கள் கொலையாயுதம்
கொடூரத்தோடுதான் குரைத்தது
அமைதிப்புறாவின் அழகை
எங்கே ரசித்தது?

உங்கள் இனவாதம்
உயிர்களைக் கொய்ததால்
எரிமலையானோம்
எரிமலையானோம்.

இனஉரிமை இழந்தோம்
மொழியுரிமை இழந்தோம்
மானுடம் இழந்தோம்
மண்ணகம் இழந்தோம்
முகங்களை இழந்தோம்
முகவரி இழந்தோம்

முப்பது ஆண்டுகளில்
மூத்தகுடி இழந்தோம்
தாயை இழந்தோம்
தந்தையை இழந்தோம்.

ஆனால் எங்கள்
சமத்துவத்தை
சகோதரத்துவத்தை
ஒருபோதும்
இழக்கவேமாட்டோம்...

மனிதத்துவத்தின்
புனிதத்துவ வடிவங்கள் நாங்கள்
எங்களை
மதவெறிகொண்டு
மறுதலிக்காதீர்கள் ..

நாங்கள்
பூக்களோடு பேசவேண்டும்
புறாக்களோடு பறக்கவேண்டும்
புலர்வானம் பார்க்க வேண்டும்
சர்வ ஜனங்களுக்கு
சாதிபேதமில்லா சமாதானத்தை
சாதித்துக் காட்டுவோம்
எங்களை
வாழ விடுங்கள் ...

ஒடுக்கப்பட்டவர்களே!
ஒன்று சொல்கிறோம்
கேளுங்கள்
உங்கள் வரலாற்றை
இலங்கை மக்களின்
இதயங்களில் எழுதுங்கள்!!!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com