Monday, October 5, 2009

முறிந்தது அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி . . . கட்சி கூட்டத்தில் ராமதாஸ் அறிவிப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., நேற்று திடீரென வெளியேறியது. கூட்டணி அமைத்த ஐந்து மாதங்களுக்குள் திருப்பம் ஏற்பட்டு, உறவு முறிந்தது. பா.ம.க.,வின் இந்த திடீர் அறிவிப்பு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர் தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து பா.ம.க., போட்டியிட்டது.

போட்டியிட்ட ஏழு இடங்களிலும் பா.ம.க., தோற்றது. அ.தி.மு.க., கூட்டணியால், 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.தேர்தல் முடிவில் இருந்தே பா.ம.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசிய ஜெயலலிதா, பா.ம.க.,வை மட்டும் சற்று ஒதுக்கியே வைத்திருந்தார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறவு பட்டும்படாமல் இருந்தது.

இந்நிலையில், பா.ம.க., தலைமை நிர்வாக குழு கூட்டம், ராமதாஸ் முன்னிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பா.ம.க., வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தலின் போது ஏற்பட்ட ஒரு மோதல் குறித்து ராமதாஸ், அன்புமணி, மருமகன் பரசுராமன், தம்பி சீனிவாசன், மருத்துவக் கல்லூரியில் பயிலும் பேரன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்து, கொலை வழக்கில் சேர்க்கப் பட்டனர்.போலீஸ் விசாரணைக்குப் பின் ராமதாஸ், அவரது குடும்ப உறுப்பினர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண் முகம் இதை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்தார்.

அவரது முறையீட்டை விசாரணை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அவர் இப்போது ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து ராமதாஸ், அவரது குடும்ப உறுப்பினர்களை சேர்க்க கோரியுள்ளார். இப்பிரச்னை குறித்து ஜெயலலிதாவை ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் சந்தித்து விளக்கிக் கூறினர். அதற்குப் பின்பும் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருப்பது சாதாரண விஷயம் அல்ல என நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தனர். இதன்பிறகும் அ.தி.மு.க.,வுடன் தோழமை உறவு என சொல்வதற்கு எதுவும் இல்லை. அக்கட்சியுடன் இனி உறவு தேவையில்லை.

ஒரு நிமிடம் கூட அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்கக் கூடாது என ஏகோபித்த குரலில் வலியுறுத்தினர். இந்த உணர்வை மதித்து, "அ.தி.மு.க.,வுடன் உள்ள கூட்டணி உறவை பா.ம.க., முறித்துக் கொள்கிறது' என, நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு பா.ம.க., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்ததில் இருந்தே பா.ம.க., வை அ.தி.மு.க., சற்று ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம், தேர்தல் முடிவுகள் தான் என அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்டு தோற்ற பல தொகுதிகள் வடமாவட்டங்களில் வந்துள்ளன. வடமாவட்டங்களில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இந்த விவரங்களை அக்கட்சித் தலைமை உன்னிப்பாக ஆராய்ந்துள்ளது.

பா.ம.க.,வுக்கு எதிரான மக்களின் மனப் போக்குக்கு எதிராக கூட்டணி வைத்தது தவறு என அக்கட்சி உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே, பா.ம.க.,வை அ.தி.மு.க., மேலிடம் உதாசீனப்படுத்தியது. ஜெயலலிதாவை ஜி.கே.மணி சந்திக்கச் சென்றபோது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்திக்க விரும்புவதை தெரிவித்துள்ளார். அதற்கு போயஸ் தோட்டத்தில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. சி.வி.சண்முகம் வழக்கு தொடரவும் ஜெயலலிதா பச்சைக் கொடி காட்டியுள்ளார். இவை அனைத்தும் தான் பா.ம.க., - அ.தி.மு.க., உறவு முறிய காரணமாக அமைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com