கருணை கொலை: ராஜீவ் கொலை குற்றவாளி கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளி ராபர்ட் பயஸ், ""தன்னை கருணை கொலை செய்ய உத்தரவிடுமாறு'' முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பயஸ்.
14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் நபர்களை, ஆலோசனைக்குழு கூடி விடுதலை செய்வது வழக்கம். ஆனால், ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகள் கழித்துதான் ஆலோசனைக் குழு கூடியது.
26.12.2006-ல் கூடிய ஆலோசனைக் குழுவில் சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும், உளவியல் மருத்துவர் தகுதியான சான்றிதழும் அளித்திருந்தனர். ஆனால் இலங்கையில் போர் நடைபெறுகிறது. சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று பல காரணங்களை காட்டி விடுதலை தவிர்க்கப்பட்டது.
இதை எதிர்த்து ராபர்ட் பயஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ""அரசு சார்பற்ற அதிகாரிகளை நியமித்து சட்டப்படி மீண்டும் ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பளித்து ஓராண்டாகியும், ஆலோசனைக் குழு கூட்டப்படவில்லை. ஆலோசனைக் குழுவை விரைவில் கூட்டக் கோரி மாவட்ட ஆட்சியர், சிறைத்துறை தலைவருக்கு பல தடவை ராபர்ட் பயஸ் மனு செய்தும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ராபர்ட் பயஸ் மனு அனுப்பியுள்ளார்.
அதில், "கடந்த 18 ஆண்டாக குடும்பத்தைப் பிரிந்து தனிமைச் சிறையில் உள்ளேன். தற்போது எனது குடும்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியாமல் தவிக்கிறேன்.
ஏழு ஆண்டுகள் முடிவடைந்த சிறைவாசிகளை கூட விடுதலை செய்தீர்கள். நானோ 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி மாநில அரசு, மத்திய அரசிடம் விடுதலை செய்வதற்கு முன் ஆலோசனை செய்தல் வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் சாசனம் 161 பிரிவின்படி மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியதில்லை என்று கூறிய பின்னரும், மத்திய அரசிடம் தெரிவிக்காமல் விடுவிக்க முடியாது என்று மாநில அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இவைகளை பார்க்கும்போது அரசியல் உள்நோக்கங்கள் காரணமாகவே நியாயமும், நீதியும் மறுக்கப்படுகிறது என்பது வெளிச்சமாகிறது.
எனது நீண்ட கால சிறைவாசம், குடும்ப சூழ்நிலையைக் கொண்டு விடுதலை செய்யுங்கள். இல்லையெனில் கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது பட்டினி சாவு மேற்கொள்வதையாவது இடையூறு செய்யாமல் விட்டுவிடுங்கள்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் எம்.ஏ. வரலாறு: இவர் சிறையில் இருந்தபடியே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சி, ஊட்டச்சத்து, தந்தை பெரியார் பாலிடெக்னிக் மையத்தின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகளை முடித்துள்ளார்.
நன்றி தினமணி
0 comments :
Post a Comment