வேலூர் பெண்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் திங்கள்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் திங்கள்கிழமையோடு 5 நாள்களைக் கடந்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் பெண்கள் சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, "தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்; நீதிமன்ற உத்தரவுபடி இதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்' எனக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ஜெயபாரதியிடம் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கடிதம் கொடுத்தார்.
இதையொட்டி, சிறையில் காலையில் வழங்கப்பட்ட சிற்றுண்டியைப் புறக்கணித்த அவர், பிற்பகல், மாலை நேரங்களில் வழங்கப்பட்ட உணவையும் புறக்கணித்து, உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இவரிடம் சிறைத்துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி ராபர்ட் பயஸ் 5-வது நாளாகத் தனது உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை தொடர்ந்தார்.
இருவருமே, சிறையில் வழங்கப்படும் உணவை மறுத்து, தண்ணீர் மட்டுமே குடிப்பதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனை பெற்ற 5 பேருமே 14 ஆண்டுகளைக் கடந்து, தற்போது 18 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்கள். தங்களை விடுவிக்கக்கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், இன்னமும் குழு அமைக்கப்படாமல் இருப்பதால், அடுத்தடுத்து இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி தினமணி
0 comments :
Post a Comment