வி.முரளிதரன் கிழக்கு மாகாண சபையை அவமதிக்கும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் - பிரதீப் மாஸ்ரர்
அண்மையில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள் கிழக்கு மாகாண சபை, அதன் செயற்பாடுகள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தானது, ஜனாதிபதியின் செயலை உதாசீனம் செய்வதாக அமைந்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எ.சி. கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்ரர்) தெருவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையானது எமது திருநாட்டின் ஜனாதிபதி அவர்களின் உயரிய சிந்தனையின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாவரும் ஜனாதிபதியின் பிரதம செயலகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டார்கள்.
அத்தோடு கிழக்கு மாகாண சபையிலே தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுமே முன்னாள் பாரளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சமூகப் பற்றாளர்கள், மக்கள் விடுதலைப் போராளிகளுமாவர்.
அத்தோடு ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியமானது, மக்களின் அமோக ஆதரவுடன் ஜனநாயக அடிப்படையில் மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட கௌரவத்திற்கு உரியவர்களாவர்.
இவர்களை அவமானப்படுத்துவது கௌரவ உறுப்பினர்களின் அடிப்படை மனித உரிமையினையும், சிறப்புரிமையினையும் மீறும் செயலாகும். எனவே கிழக்கு மாகாணத்தில் பிறந்து கிழக்கு மக்களின் வீரன் என தன்னைக் கூறிக் கொள்ளும் அமைச்சர் தமிழ் மக்களின் விடுதலை வேட்கையைத் தணிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட மாகாண சபையைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா அவர்கள் பகிரங்கமாகக் கேட்டக் கொள்கின்றார்.
0 comments :
Post a Comment