பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தம் : கிருஷ்ணா கோரிக்கை
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை தயாரித்து இருப்பு வைத்து கொண்டு "இனிமேல் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்' என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும், என ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் வற்புறுத்தி வருகிறது. ஒன்றிரண்டு அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளையும், அணுசோதனை நடத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோரப்படுகிறது.
இந்நிலையில், ஐ.நா.,பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா பேசியதாவது: அணு ஆயுதம் இல்லாத உலகத்தை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் பாரபட்சமில்லாத வகையில் இருக்க வேண்டும். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற இந்த ஒப்பந்த செயல்பாட்டில் பாகுபாடு இருக்கக்கூடாது. இந்த நிலை ஏற்படும் போது இந்தியா இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்ளும். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ், "ஒரு காலகட்டத்தில் அனைத்து அணு ஆயுதங்களும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்' என்றார். அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தானுடனான பிரச்னைகளை இந்தியா அமைதி பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்க்க விரும்புகிறது. இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் அமைதி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதே போல ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் தீவிர ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் போல பயங்கரவாத ஒழிப்பு ஒப்பந்தம் ஒன்றை சர்வதேச அளவில் கொண்டு வர வேண்டும். மும்பையில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் மோசமானது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்யப்பட வேண்டும். நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிருஷ்ணா பேசினார். இந்த கூட்டத்துக்கு வந்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை, கிருஷ்ணா சந்தித்து பேசினார்.
0 comments :
Post a Comment