~உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நிலைமை சிறப்பானது'
ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா. பிரதிநிதி பெஸ்கோ தெரிவிப்பு
இலங்கையின் தற்போதைய நிலவரத்தை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பானதாக உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நிவாரணக் கிராமங்களின் நிலவரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்றுசந்தித்தார்.
இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப்படுவதுடன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இலங்கை அவ்வாறான நீண்ட காலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர்களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் ரோஹித்த போகொல்லாகம, மிலிந்த மொரகொட, பேரி யல் அஷ்ரஃப், மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment