Wednesday, September 30, 2009

போர்குற்ற விசாரணைகளுக்காக ஒர் சிப்பாயை தன்னும் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. விமல்.

இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதற்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் பல தரப்பினரும் வேண்டிவரும் போது, அவ்வாறான செயற்பாடுகள் எதுவும் இலங்கையில் இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜேவிபி பாராளுமன்றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கையிலே போர் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க அரசு விசாரணைகளை மேற்கொள்ள முனையுமானால், ஜனாதிபதி ஜே.ஆ ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையிலே நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் குரல் எனப்படும் நிறுவனத்தினால் இலங்கைக்கும் எமது பிராந்தியத்திற்கும் எவ்வாறான அச்சுறுத்தல்கள் உண்டு என்பதை நாம் சிந்திக்கவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கம்; விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு அரசாங்கம் செய்யாதவிடத்து பாராளுமன்ற அமைச்சர்கள் அதற்கான விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைக்கவேண்டும். அத்துடன் இது தொடர்பாக மிகவும் உன்னிப்பாக அவதானித்து அமெரிக்காவின் மேற்படி நிறுவனத்தை இலங்கையில் இருந்து அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச, இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும், இது தொடர்பாக மக்கள் மிகவும் தெளிவான சிந்தனைகளுடன் இருக்க வேண்டும் எனவும், இலங்கைப் படையினர் மீது சுமத்தப்படும் போர்குற்றங்களுக்காக எமது படையின் எந்த ஓர் அதிகாரியையோ அன்றில் ஓர் சிப்பாயையோ நாட்டிற்கு வெளியே கொண்டுசெல்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும், அவ்வாறானவர்களின் முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிப்பதற்கு மக்கள் திடசங்கர்ப்பம் பூணவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com