Monday, September 21, 2009

டக்ளஸ் பீரிசுக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது:

1988-1989 காலப்பகுதியில் இரு சகோதரர்களைக் கடத்தி ஒருவரைக் கொலை செய்ததாக காலி நீதிமன்றினால் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் நீதிமன்று 5 வருட சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

அத்தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் மனுவை விசாரித்த கொழும்பு உச்ச நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவரையும் பத்துலட்சம் ரூபா பிணையில் விடுவித்ததுள்ளது.

குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளான ஜோசப் டக்ளஸ் பீரிஸ், காமினி ரத்நாயக்க, இகல பண்டிதகெதர ஜெயரத்ன, மகாதுரகே ரணதுங்க, ரஞ்சித் ஜெயசேகர ஆகியோர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சந்தேக நபர்களான பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் வரை நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக உழைத்தவர்கள் எனவும் தற்போது அவர்களது உடல் நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பிணைவழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அங்கு ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி, குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்க முடியாது என தாமோதரம்பிள்ளையின் வழக்கு தீர்ப்பைச் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது அவர்கள் புரிந்துள்ள குற்றத்தின் பாரதூரத்தை எடுத்தியம்புகின்றது. எனவே சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க நியமிக்கப்படடிருந்த பொலிஸ் அதிகாரிகள் அதை துஸ்பிரயோகம் செய்துள்ளனர். ஆகவே அவர்களுடைய குடும்ப நிலைமை மற்றும் உடல் நிலைமைகள் இங்கு கருத்தில் கொள்ளக்கூடியவை அல்ல. புணம் இருக்குமானால் எவரும் நாட்டைவிட்டு தப்பி ஓடி விடலாம். அவர்களுக்கு அவ்வாறு நோய்கள் இருப்பின் அது சிறைச்சாலை திணைக்களத்தினால் கையாளப்படும் எனவும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

எவரையும் சட்டத்தை தனது கையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நிமால் தம்புவாசம், குற்றவாளிகள் 2001ம் ஆண்டில் இருந்து 35 தடவைகள் தவறாமல் நீதிமன்றிற்கு சமுகமளித்திருக்கின்றனர். அத்துடன் சந்தேக நபர்களான பொலிஸ் அதிகாரிகள் நாட்டை பயங்கரவாதம் பீடித்திருந்தபோது தமது சேவையை நாட்டிற்கு வழங்கியுள்ளனர். அவர்களின் சேவையையும், அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்களையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கு பிணை வழங்குகின்றேன் என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com