விடுவிக்கப்படும் இடைத்தங்கல் முகாம் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். மாவை.
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் மக்கள் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர் எனவும், இது ஒரு சிறையில் இருந்து மற்றுமோர் சிறைக்கு அனுப்புவது போன்ற செயலாகும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
கடந்த சுமார் 2 தசாப்தங்களாக புலிகள் இம்மக்களை வெளி உலகைக் காட்டாமல் வன்னியில் அடைத்து வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் புலிகளுடன் இணைந்து நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அம்மக்களின் வாக்குகளை ஆயுத முனையில் பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்று புலிகளின் நலன் காப்பாளர்களாக செயற்பட்டு வந்திருந்தனர். இன்று புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுடன் பின்கதவால் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக பேரம்பேசலில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பினர், மக்களை தொடர்ந்து குழப்ப நிலையில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் எனக்கூறப்படுகின்றது.
குறிப்பாக புலம்பெயர் நாடுகள் பலவற்றிற்கும் சென்று புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் மக்கள் எவ்வித வாழ்வாதாரங்களும் அற்றவர்களாக முகாம்களில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் அன்று புலம்பெயர் தமிழர்களிடம் சென்று புலிகளுக்கு நிதிவழங்குங்கள் என இரந்து கேட்ட கூட்டமைப்பினர், இன்று முகாம்களில் இருந்து வெளியேறும் மக்களின் எதிர்கால பொருளாதார நலன் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.
இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக ஆரம்ப காலகட்டங்களில் முதலைக்கண்ணீர் வடித்த புலம்பெயர் தமிழருக்கு அம்மக்கள் தொடர்பாக உண்மையான ஆர்வம் இருந்தால் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறும்போது அம்மக்களுக்கு ஏதாவது சுயதொழில் செய்துவாழக்கூடிய வழிவகைகளை அமைத்துக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சி செய்யாது அம்மக்களின் அவலங்களை உலகுக்கு கூறி தொடர்ந்து அரசியல் செய்ய முனைந்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment