Thursday, September 17, 2009

படையினர் தன்னை விடுதலை செய்வதாக கூறியபோது அதிர்ச்சி அடைந்தாரம் தமிழ்வாணி.

வன்னியில் புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் செயற்பாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வந்தாகக் கூறப்படும் பிரித்தானியா வாழ் தமிழ் யுவதி ஒருவர், இறுதியாக புதுமாத்தளன் பிரதேசத்தை படையினர் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தபோது படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாதமளவில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து விடுதலை பெற்று லண்டன் சென்றடைந்துள்ள தமிழ்வாணி ஞானகுமார் ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய பேட்டிகளை வழங்கி தமிழ் மக்களையும் சர்வதேச சமுகத்தையும் குழப்பி பிரபல்யம் அடைய முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அதிகாரிகள் என்னிடம் நீர் விடுதலை செய்யப்படுவீர் எனக் கூறினார்கள். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறுகின்றார். நிரபராதி ஒருவர் விடுதலை செய்யப்படுகின்றார் என்ற செய்தி கேட்கும்போது சந்தோசப்படுவதுண்டு. ஆனால் குறிப்பிட்ட நபர் அதிர்ச்சி அடைந்தாக கூறுகின்றார். அதற்கான காரணம் இவர் வன்னியில் இருந்த காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார் என்பதையும், அதற்காக தனக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கின்றார் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

அல்லது புலிகள் இலங்கை இராணுவத்திரை மோசமானவர்கள் என மேற்கொண்டிருந்த பிரச்சாரத்தை நம்பியிருந்த இவரை, இலங்கைப் படையினர் எவ்வித தயக்கமும் இல்லாமல் விடுதலை செய்கின்றோம் என்றபோது, புலிகள் இத்தனை காலமும் செய்தது பொய்பிரச்சாரம் என உணர்ந்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும்.

அத்துடன் இலங்கை இராணுவத்தினர் 5 தடவைகளுக்கு மேல் விசாரணைகள் மேற்கொண்டதாகவும், இவரிடம் நீ எங்கிருந்து வந்தாய்? உனது பெற்றறோர் எங்குள்ளனர்? ஏன் வன்னிப்பிரதேசத்தில் தங்கியிருந்தாய்? என்ற கேள்விகளை கேட்டதாக கூறுகின்றார். ஆனால் இக்கேள்விகள் மிகவும் சாதாரணமனதும் அவசியமானதுமே. மாறாக நீ வன்னியில் எத்தனை பேருடன் உடலுறவு கொண்டிருந்தாய்? என அவர்கள் கேட்டிருப்பார்கள் ஆயின் அது விமர்சிக்கப்படவேண்டியதாகும்.

அடிப்படையில் குறிப்பிட்ட பெண் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறியுள்ளார். இவர் புதுமாத்தளனில் இருந்து இடைத்தங்கல் முகாம் வரும்வரைக்கும் சட்டத்தை மதிக்கவில்லை. இவர் வன்னியில் தங்கியிருந்த காலங்களில் பிரிட்டிஸ் பிரஜையான அவர் அங்குள்ள சர்வதேச ஸ்தாபனங்கள் ஊடாக தான் அங்கிருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு செய்யாது பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுடன் இணைந்திருந்ததாக இவருடன் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடாக அறிய முடிகின்றது.

இவர் வன்னியில் இருந்த காலத்தில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் முழுநேரமும் இணைந்து செயற்பட்டதாகவே வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இவர் அங்கிருக்கும் போது புலிகளின் காயமடையும் உறுப்பினர்களுக்கே சிகிச்சை அளித்தாக வன்னிமக்கள் தெரிவிப்பதுடன், புலிகளின் முன்னணி செயற்பாட்டாளரான இவரை இலங்கை அரசு விடுவித்துள்ளதையிட்டு மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துமுள்ளனர்.

புலிகளினால் தமது வாழ்நாட்கள் சிதைக்கப்படுவதற்கு ஒத்தாசை புரிந்த மேற்படி யுவதி இலங்கையில் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கப்பட வேண்டியவர் என்பது வன்னி மக்களின் கருத்தாக உள்ளது.

வன்னிமக்களின் இக்கருத்துக்களை உறுதிப்படுத்துமுகமான கருத்தொன்றினையும் தமிழ்வாணி ஞானக்குமார் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் வன்னியில் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பாவித்துள்ளார்களே என்று கேட்டபோது, அவ்வாறான அனுபவங்கள் எவற்றையும் தான் கண்டிருக்கவில்லை என சர்வசாதாரணமாக கூறுகின்றார்.

புலிகள் மக்களை மனித கேடங்களாக பயன்படுத்தினார்கள் என்பது உலகில் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புக்கள,; மற்றும் சர்வதேச ராஜதந்திரிகளால் வெளிப்படையாக கூறப்பட்ட விடயம் என்பதுடன் அது ஆதாரங்கள் தடயங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் உலகத்தை ஏமாற்ற முனைவது இவரது இக்கருத்தினூடாக வெளிப்படையாக தெரிகின்றது.

இன்று இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் அனைவருமே தாம் புலிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், தமது விருப்பிற்கு மாறாக புலிகள் அவர்களை தடுத்து வைத்திருந்தாகவும், தம்மை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தியதாகவும், தமது சிறார்களை பலவந்தமாக படையில் இணைத்துக்கொண்டதாவும் தெரிவிக்கின்ற நிலையில் குறிப்பிட்ட யுவதி உலகையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முனைவது வேதனைக்குரியதாகும்.

இவர் வன்னியில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியிருக்கின்றார் என்ற நியாயமான சந்தேகம் நிவர்த்தி செய்யப்படாத நிலையிலும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ்வாணி, மிகவும் அநாகரிகமான முறையில் நடைமுறைகளுக்கு மாறாக ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கி தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்ள முனைவதானது தமிழ் மக்களின் நற்பெயருக்கு மிகவும் அபகீர்த்தி ஏற்படுத்தும் என்பதுடன், இடைத்தங்கல் முகாம்களிலும் தடுப்புக்காவலிலும் உள்ள மேலும் சில வெளிநாட்டுப் பிரஜைகளின் விடுதலையை தாமதப்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com