மாகாண நிர்வாகத்தில் கருணா தலையிட்டால் சிறையில் அடைப்பேன். பிள்ளையான்
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துவரும் தருணத்தில் கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினரிடையேயான அதிகாரப்போட்டி தீவிரமடைந்து வருவதுடன், அவை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்வில் அச்சத்தை தோற்றுவித்து பலத்த சந்தேகங்களையும் உண்டுபண்ணி வருகின்றது.
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்த்தில் உள்ள பிரதேச செயலர் அலுவலகங்கள் போன்ற மக்களுடன் மிகவும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள அலுவலகங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன், அங்குள்ள அதிகாரிகளுக்கு மிகவும் அதிகார தோரணையிலான கட்டளைகளை வழங்கிவருவதாகவும், அக்கட்டளைகள் தனது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்தாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்பாராத விதமாக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி அலுவலகங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் அங்குள்ள அதிகாரிகள், மக்களுடன் பேசும்போது, நியமன எம்பி முரளிதரன் மற்றும் ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தலையிடுவதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும் இங்குள்ள அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் அவர்களின் எவ்வித ஆலோசனைகளுக்கோ அன்றில் கட்டளைகளுக்கோ செவி மடுக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அவ்வாறு அவர்களின் செயற்திட்டங்களுக்கு கீழ்படிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கருணா, பாரதி ஆகியோர் கிழக்கு மாகாண நிர்வாகத்தினுள் தங்கள் மூக்கை நுழைப்பார்களேயானால் அவர்களை சிறையில் அடைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகங்களுள் நுழையும்போது அங்கு கடமைகள் நிமித்தம் சென்றிருக்கக்கூடிய மக்கள் வெளியேறுவதற்கோ, புதிகாக காரியாலய வளாகத்தினுள் எவரும் உள்நுழைவதற்கோ முடியாதவாறு பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும்போது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.
0 comments :
Post a Comment