Tuesday, September 22, 2009

மன்மோகன், சோனியாவிடம் தி.மு.க., - காங்., எம்.பி.,க்கள் முறையீடு :

எம்.பி.,க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை.
"முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை, அவரவர் சொந்த இருப்பிடங்களில் உடனடியாக குடியமர்த்தும்படி இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும், தமிழர்களின் இன்றைய நிலை குறித்து நேரில் அறிந்து வருவதற்கு எம்.பி.,க்கள் குழு ஒன்றையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, பிரதமர் மற்றும் சோனியாவிடம் தமிழக எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து நேற்று டில்லியில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தனித்தனியே முறையீடு செய்யப்பட்டது. ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று காலை 10.30 மணிக்கு தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்.பி.,க்கள் குழு சந்தித்தது. இச்சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் உடன் இருந்தனர்.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் உள்ள, 2.6 லட்சம் தமிழர்களை மீண்டும் அவரவர் இருப்பிடங்களிலேயே குடியமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசிடம் வலியுறுத்தும்படி பிரதமரை கேட்டுக் கொண்டனர். மத்திய அரசு 500 கோடி ரூபாய் வரையிலும், தமிழக அரசின் சார்பில் எண்ணற்ற உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தும், இவை அனைத்தும் உரிய முறையில் அளிக்கப்பட்டனவா என்பதை தெரிந்து கொள்வதற்கும், உண்மையில் அங்கு என்னதான் சூழ்நிலை உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வாறு அனுப்பப்படும் குழுவுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுதந்திரமான முறையில் செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் இந்த குழு கூறியது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டு வருகின்றனர். கச்சத்தீவு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதி. இங்கு மீன்பிடிக்கும் மீனவர்களை தாக்குவதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் அங்கிருந்து சோனியாவின் இல்லத்திற்கு சென்ற இந்த குழு, அவரை சந்தித்துப் பேசியது. அவரிடம் பேசிய டி.ஆர்.பாலு, "வன்னி பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஐந்தாயிரம் பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளிவருவது கவலையளிக்கும்படி இருக்கிறது' என தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் சோனியாவிடம் வழங்கப்பட்ட எட்டுப்பக்க கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த எட்டு மாதங்களுக்கு முன் என்ன கோரிக்கை வைத்தோமோ அதையேதான் இப்போதும் வைக்கிறோம். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் குறையவே இல்லை. கடந்த 19ம் தேதி கூட கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது கடுமையான தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியது. 2006ம் ஆண்டிலிருந்து 36 தாக்குதல் சம்பவங்கள் நடந்து விட்டன. ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், 27 பேர் கடுமையான காயப்பட்டுள்ளனர், 513 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். கச்சத்தீவு, தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதி. கச்சத்தீவை மீண்டும் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தீவை குத்தகைக்கு எடுத்தாவது தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். தான் அளித்த வாக்குறுதிபடி இலங்கை அதிபர் நடந்து கொள்ளவில்லை. இலங்கையில் திறந்த வெளியில், முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமை கவலையளிக்கும்படி உள்ளது. மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அவர்களின் நிலைமை மேலும் மோசமாகும். அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலை கவலையளிக்கும்படி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூட வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரவர் ஏற்கனவே வசித்த இருப்பிடங்களில் குடியமர்த்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களைச் சந்தித்த எம்.பி.,க்கள் குழுவிடம், பிரதமரும், சோனியாவும் தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com