Monday, September 21, 2009

ரிஆர்ஓ ரெஜியை பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவு.

புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜியை பிரித்தானியாவை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் பணித்துள்ளதாக தெரியவருகின்றது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்
மக்களிடமும், பல உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களின் அவலங்களின் பெயரால் பல கோடி ரூபாய்களை வசூலித்து அப்பணத்தை கொண்டு உலகில் முதல்தர பயங்கரவாதிகளாக இனம்காணப்பட்டிருந்த புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொள்வனவிற்கு பயன்படுத்தியதான குற்றச்சாட்டு ரிஆர்ஓ அமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பல நாடுகள் ரிஆர்ஓ வின் சொத்துக்களை யும் பணத்தையும் முடக்கியுள்ள நிலையில் இலங்கையில் ரிஆர்ஓ அமைப்புக்கு எதிரான பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை நீதிமன்றில் இவ்வழக்குகள் தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகுமாறு ரெஜிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமது நியாயங்களை நீதிமன்றில் நிரூபிக்க முடியாதவர்களாக குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான ரெஜி பிரித்தானியா தப்பிச் சென்றதுடன் அங்கு அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.

மக்களுக்கான நிவாரணப் பணிகளின் பெயரால் அறவிட்ட பணத்தைக் கொண்டு புலிகளின் துணைப்படையாக செயற்பட்டு அதே மக்களினது உயிர் உடமைகளுக்கு அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த மேற்படி நபரை பிரித்தானியா அரசு வெளியேற உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

உலகில் உள்ள பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்க உலக நாடுகள் கங்கணம் கட்டி நிற்கும் வேளையில், இலங்கையில் செயற்பட்டுவந்ததும் உலகில் முதல்தர பயங்கரவாதிகள் என இனங்காணப்பட்டிருந்ததுமான புலிகளியக்கம் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வியக்கம் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கான முழுப்பொறுப்பும் உலகநாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதும் வெளிநாடுகளில் உள்ள புலிகள் தொடர்ந்தும் இலங்கையின் இயல்பு நிலையை குழப்பி மீண்டும் தலைதூக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர். அதற்காக வெளிநாடுகளில் உள்ள புலிகள் தமது முழுப் பணப்பலத்தையும் பிரயோகிப்பதற்கு தயராகவுள்ளனர். அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள புலிகளை கண்காணித்து அவர்களை அந்தந்த நாடுகள் முடியுமானவரை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களது பயங்கரவாதத்தை நோக்கிய செயற்பாடுகளை முடக்கவேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் மேற்கொண்டுவரும் போரில் வெற்றி கொள்ள முடியும்.

அந்தவகையில் பிரித்தானியா ரெஜி யை வெளியேறுமாறு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையானால், பிரித்தானியா உலகில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் நேர்மையாக இருப்பதாக கருதமுடியும். ரெஜி போன்றவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் வளர்வதற்கு அயராது உழைத்துவருவது தெளிவாகியுள்ள நிலையில் அவர்களது அச்செயற்பாடுகளுக்கு சுதந்திரமான தளம் வழங்காது, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் போது அவர்கள் இத்தனை காலமும் மனித குலத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்களுக்கு எதிராக சட்டம் அதன் வேலையை செய்யும்.

இவற்றை உணர்ந்து கொண்ட ரெஜி சில ஊடகங்களை நெருங்கி தனக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டி செய்திகளை வெளியிடும்படியும், பிரித்தானியா தனக்கு வெளியேற விடுத்துள்ள உத்தரவை விமர்சிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு இணங்க தேசம்நெற் இணையம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மனித குலத்திற்கு இழைத்த துரோகங்களை மறைத்து, ரெஜியை ஓர் சமூகசேவகனாக வர்ணிக்க முனைவது கேலிக்குரியதாகும். அத்துடன் இவ்வூடகத்தில் ரெஜி சார்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ள நபர் ரெஜி க்கு பிரித்தானியா விடுத்திருக்கு அறிவுறுத்தலுக்கு எதிராக மக்களை போராட்டம் நடாத்தவருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


பிரித்தானியாவின் குறிப்பிட்ட முடிவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது. எனவே உலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது மனித நேயம்மிக்கவர்களின் கடமையாகும். அந்தவகையில் பிரித்தானியா ரெஜி யை வெளியேற்ற முயற்சிக்குமாயின் அதற்கு அனைவரும் ஆதரவு வழங்கமுன்வரவேண்டும்.

அடுத்து ரெஜி க்கு இலங்கையில் எவ்வித உயிர் அச்சுறத்தல்களும் இல்லை என்பது அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கேபி கையாளப்படும் விடயத்தில் இருந்து தெளிவாகின்றது. கேபி கைது செய்யப்பட்டு அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறே ரெஜி யும் இலங்கை சென்றால் சட்டம் அவரை கையாளுமே தவிர அவருக்கு அங்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அத்துடன் அவர் வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கும் போது அது மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com