தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும் சதிகாரர்கள் மீண்டும் நாட்டை காட்டிக் கொடுக்க முயற்சி.
`உயிருடன் இருக்கும் வரை இடமளியேன்’
தாய்நாட்டுக்கு துரோகம் செய்த சில சதியாளர்கள் மீண்டும் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்ற போதிலும் தான் உயிருடன் இருக்கும் வரையும் அதற்கு இடமளியேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.
எமது பாதுகாப்பு படையினர் தமது உயிர்களை அர்ப்பணித்துப் பாதுகாத்திருக்கும் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க எவருக்குமே இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், குரூர பயங்கரவாதம் காரணமாக இந்நாட்டு மக்கள் மூன்று தசாப்த காலம் பீதி கொண்டிருந்தார்கள். அந்த பயங்கரவாதம் இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போது முழு நாட்டுக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரணியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வெவ்வேறு விதமான குற்றச் சாட்டுக்களை எழுப்பு கின்றார்கள்.
தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அவர்கள் கொண்டு செல்லுகின்ற பிழையான பிரசாரங்களுக்கு எதிராக இந்நாட்டின் மீது அன்பு கொண்டுள்ள சகலரும் கிளர்ந்தெழ வேண்டும்.
எமது நாடு இறைமைமிக்க சுதந்திரமான நாடு. இன்னொரு நாடு எம்மை ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறான நிலைமைக்கு ஒரு போதுமே இடமளிக்கப்படமாட்டாது. வரலாற்றில் வெவ்வேறு விதமான காட்டிக் கொடுப்புக்களை இந்நாடு கண்டிருக்கின்றது. என்றாலும் நாம் பெற்றிருக்கும் வெற்றியைக் காட்டிக் கொடுக்க இடமளிக்க மாட்டோம்.
இப்போது எமது நாட்டைச் சேர்ந்த சிலர் நாட்டுக்கு நாடு சென்று நாம் பெற்றிருக்கும் வெற்றியை மாத்திரமல்லாமல் எமது நாட்டையும், பாதுகாப்பு படையினரையும் காட்டிக் கொடுக்கின்றனர். இதனை அவர்கள் ஒரு விளையாட்டாகக் கருதுகின்றனர். நாட்டில் எதிர்க்கட்சி இருக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சி இருப்பது அவசியம் ஏனென்றால் அரசாங்கம் ஏதாவது சந்தர்ப்பத்தில் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும், அது தொடர்பாக கலந்துரையாட வேண்டியதும் எதிர்க்கட்சியின் பொறுப்பாகும்.
இருந்தும் இப்போது எமக்கு எதிர்க்கட்சி இருக்கின்றதா? அது தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றுகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக பாரிய யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது காலை வாரியவர்கள் யுத்தத்தை நிறுத்தி நாட்டைத் துண்டாட முயற்சி செய்தவர்கள் அச்செயல்களில் நின்று விடாமல் நாட்டுக்கே எதிராக மாறியுள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு எதிரான கட்சியின் தலைவராக அல்லாமல் நாட்டுக்கே எதிரான தலைவராக செயற்படுகின்றார்.
அதனால் தான் அவர் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன் படையினரால் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்த வெற்றியைக் குறைத்து மதிப்பிடுகிறார். அவர்களை யுத்த நீதி மன்றத்திற்கு முன்பாக நிறுத்துவதற்கும், எமது நாட்டுக்குக் கிடைக்கின்ற உதவிகளை நிறுத்துவதற்கும், எமது நாட்டின் அபிவிருத்தியைக் குலைப்பதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச ஒத்துழைப்பு இப்போது எமக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவை பற்றி உங்களுக்கு எதிர்காலத்தில் தெரியவரும்.
மஹிந்த சிந்தனை மூலம் நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதமானவற்றுக்கும் மேலானவற்றை நிறைவேற்றியுள்ளோம். அரசாங்கம் இது வரை எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியானதா? பிழையானதா என்பது குறித்து மக்களிடம் கேட்க வேண்டியது அரசின் கடமையே.
அரசின் இந்தப் பயணத்தை மக்கள் நிராகரிக்கும் வரை உச்ச அளவில் மக்களுக்கு சேவை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
இவ்வைபவத்தில் அமைச்சர்கள் மைத் திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ் தர்களும் கலந்து கொண்டார்கள். (ரு-து)
நன்றி தினகரன்
0 comments :
Post a Comment