இலங்கைத் தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவி: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்
""இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை அளிப்பதில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன'' என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் நிலை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ஆகியன குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதங்கள் எழுதினார் முதல்வர் கருணாநிதி.
இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
""போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் நலனில் நீங்கள் கொண்டுள்ள அக்கறை, கவலையை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். இதுகுறித்து, இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவது உள்ளிட்ட விஷயங்களை விரைந்து செய்திட வேண்டியதன் அவசியத்தை அந்த நாட்டு அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
இலங்கையில் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ரூ. 500 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அனுப்பியுள்ள நிவாரணப் பொருள்கள் அந்த நாட்டின் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment