ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளருக்கு விளக்கமறியல்.
தென்மாகாண சபைத்தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் நிசாந்த முத்துகெட்டிகமவை நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
காலி மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களான அனர்கலி அவர்களுக்கும் நிசாந்த முத்துகெட்டிகம அவர்களுக்கும் பிரதேசத்தில் ஏற்பட்ட போட்டி மோதல்களில், நிசாந்த முத்துகெட்டிகம தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக அனர்கலி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றில் பொலிஸார் வழக்கு முத்துகெட்டிகமவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தபோது நிசாந்த முத்துகெட்டிகம நீதிமன்றில் ஆஜராகி இருக்காமையை இட்டு அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜரான அவரை நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்திருந்தது.
நீதிமன்றில் பிணையை பெற்று வெளியேறிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நிசாந்த முத்துகெட்டிகம, பொலிஸார் தனது விடயத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தன்னை விளக்க மறியலில் வைக்க அவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவித்த அவர், அவ்வாறு தன்னை ஒரு நாள்தன்னும் விளக்க மறியலில் வைத்திருப்பார்களேயானால் விளைவுகள் விபரிதமாக அமைந்திருக்கும் என ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் பொலிஸார், லஞ்சம் வாங்குதல் சித்திரதைசெய்தல், பொய்குற்றஞ்சுமத்துதல், ஊழல்பேர்வழிகளுக்கு துணை புரிதல் போண்ற பல மோசடிகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட அவர் மாகாண சபைகளுக்கு உரிய பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்காவிட்டாலும் இன்னும் 21 நாட்களில் அவ்வதிகாரங்களை தென்மாகாணசபை தனது கைகளில் எடுத்து பொலிஸாருக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் என்பதை பொலிஸார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர் பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதாகவும் தனக்கு ஜனாதிபதி மஹிந்த அவசியமே தவிர பொலிஸ் மா அதிபர் அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பொலிஸார் ஒழுகங்காக தமது கடமைகளை நிறைவேற்றாதவிடத்து காலி மாவட்டத்தில் உள்ள அனைந்து பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டாய லீவு வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இவருடைய மேற்படி கருத்துக்கள் தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நிசாந்த முத்துகெட்டிகமவை கைது செய்த பொலிஸார் அவரை இன்று காலி நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது அவரை நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment