ஆந்திர முதல்வர் ரெட்டியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா உட்பட தலைவர்கள் அஞ்சலி.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சித்தூருக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவரது ஹெலிகாப்டர் மாயமாய் மறைந்தது. அந்த ஹெலிகாப்டருடனான ரேடியோ தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்கள், விமானப் படை வீரர்கள் அனைவரும் ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை விடிய விடிய தேடினார்கள். ஆனால் மறுநாள் தான் அதாவது 24 மணி நேரத்திற்கு பிறகு அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நல்லமல்லா மலைப் பகுதியில் அந்த ஹெலிகாப்டர் மோதி தீப்பிடித்து நொறுங்கி விழுந்ததில் முதல்வர் ரெட்டியும், அவருடன் சென்ற மேலும் 4 பேரும் உடல் கருகி பலியானது 24 மணி நேரத்திற்கு பிறகு தான் தெரியவந்தது.
பின்னர் ஒருவழியாக இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. முதல்வர் ரெட்டியின் உடல் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொண்டு வரப்பட்டது. ரெட்டியின் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் மற்றும் திரளான கட்சி தலைவர்களும் ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு பேகம்பேட்டில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இரங்கல் செய்திகளையும் அவர்கள் எழுதி வைத்தனர். பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா அஞ்சலி செலுத்திய பிறகு மத்திய மந்திரிகள் ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, வீரப்ப மொய்லி, பிரதிவிராஜ் சவுகான் மற்றும் முதல்வர்கள் ஷீலாதீட்சித், அசோக் ஜெல்லட் ஆகியோரும் ரெட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரெட்டியின் குடும்பத்தாருக்கு அவர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்துக் கொண்டனர்.
பிறகு ரெட்டியின் உடல் மூவர்ண கொடியால் போர்த்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வெளி ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்டது. பின்னர் இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. வழி நெடுக லட்சக்கணக்கான மக்கள் முதல்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரெட்டியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதையொட்டி நேற்று ஆஇந்திர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்த ஆந்திராவே சோகத்தில் மூழ்கியிருந்தது.
0 comments :
Post a Comment