மட். புனித மிக்கேல் கல்லூரியின் 136வது கல்லூரி தினம்
வே. தவராஜாஆசிரியர்: மட்/புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மட்டக்களப்பு.
மட்டக்களப்பு நகரின் மத்தியிலே வானளாவ உயர்ந்து வனப்புற்று விளங்கும் மிகப் பிரபல்யமான கல்லூரி புனித மிக்கேல் கல்லூரி. 135 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்து 136வது ஆண்டில் கால்பதிக்கிறது. வருடம்தோறும் கல்லூரிச் சமூகம் கல்லூரியின் ஆரம்ப நாளான புரட்டாதித் திங்கள் 29ம் நாளை நினைத்து மகிழ்வுறும் நாள்தான் கல்லூரி தினமாகும்.
1873ம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 29ம் நாளன்று 50 மாணவர்களோடும் 2 ஆசிரியர்களோடும் ஓலைகளால் வேயப்பட்ட சிறியதொரு மண்டபத்தில் தோற்றம் பெற்றதுதான் இந்தக் கல்லூரி.
முதலாவது தமிழ் கிறிஸ்தவ பாதிரியாரான அருட்பணி எவ். சேவியர் அடிகளால் உருவான கல்லூரி என்பதில் இதற்கொரு தனித்துவமுண்டு.
1895ம் ஆண்டளவில் பிரதேசங்களிலிருந்து கல்விப் பணிபுரியவென வருகை தந்த யேசு சபைத் துறவிகளால் இக்கல்லூரி பொறுப்பேற்கப்படுகின்றது. இக்காலப்பகுதிகளில் கல்லூரி துரித வளர்ச்சி காண்கிறது.
1912ம் ஆண்டில் புதிய காணியில் புதியதொரு கட்டிடத் தொகுதிக்கான கல்நாட்டும் வைபவம் நடைபெறுகிறது. யேசுசபைத் துறவிகளிலொருவரான வண பிதா பேர்டினண்ட் பொணல் அடிகளின் கைவண்ணத்தில் புதிய கட்டிடத் தொகுதி உருவாகிறது.
1914ம் ஆண்டு வைகாசித் திங்கள் 3ம் நாள், இன்று நாம் கண்டு வியக்கும் அந்தக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்படுகின்றது. மதத் தலைவர்கள், கல்விமான்கள் நல்லுள்ளம் படைத்தவர்கள் ஆகியோரது அயராத உழைப்பினால் கல்லூரி துரித வளர்ச்சியைக் காண்கிறது.
நாலாதிக்கும் கல்லூரியின் புகழ் பரவுகிறது. கல்வித் துறைகளில் மாத்திரமல்லாது, கூடைப்பந்தாட்டம், டெனிஸ் உட்பட சகல விளையாட்டுத் துறைகளிலும் தேசிய ரீதியில் சிறப்பான அடைவுகளை ஈட்டிக்கொண்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல சாரணியத் துறையிலும் கூட ஜனாதிபதி விருதுகளைப் பெறுகின்றார்கள். அந்தளவுக்கு சகல துறைகளிலும் கொடியுயர்த்தி புகழோடு விளங்குகின்றது.
சென்ற ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் பாராட்டத்தக்கது. பொறியியல்துறை, வைத்தியத்துறை உட்பட சகல துறைகளுக்குமாக 65க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள் என்பதோடு பொறியியல் துறையிலே அகில இலங்கை ரீதியிலான சிறப்பு அடைவுகளையும் ஈட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையிலும் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் சித்திபெற்றுள்ளார்கள்.
அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு நிகழ்வுகளிலே, கூடைப்பந்தாட்டத்தில் 3ம் இடத்தினையும், கபடி விளையாட்டு நிகழ்விலே ஒரு புள்ளி வித்தியாசத்தில் 2ம் இடத்தையும் ஈட்டியுள்ளார்கள்.
இவ்வாறான சாதனைகளின் வெற்றிக்களிப்பிலே 136வது கல்லூரி தினம் கொண்டாடப்படுகிறது. கல்லூரியின் முதல்வராக இலங்கைக் கல்வி நிர்வாக சேவைத் தரத்தினையுடைய செ. மகேந்திரகுமார் அவர்கள் பணிபுரிகின்றார்கள். கல்லூரியின் வளர்ச்சிக்கு கல்வி சார், சாரா ஊழியர்களின் உதவியுடனும், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் துணையுடனும் அயராதுழைக்கின்றார்.
அவரது தலைமையில் கல்லூரிதின நிகழ்வுகள் நடைபெறும். கல்லூரி மண்டபத்திலே புதிதாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தையவர்கள் திருப்பலியை ஒப்புகொடுப்பார்கள். பின்பு அனைவரும் அருட்பணி பே. பொணல் அடிகளாரது சிலை முன்றலிலே கூடுவார்கள்.
அங்கு கல்லூரிக் கொடியும், பழைய மாணவர் சங்கக் கொடியும் ஒருங்கே ஏற்றி வைக்கப்படும். கல்லூரிக்கு வடிவம் தந்த அருட்பணி பே. போணல் அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து அடிகளாரை கெளரவிப்பார்கள். தொடரும் விருந்துபசார முடிவில் மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வகுப்பறைகளில் விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
0 comments :
Post a Comment