Thursday, August 6, 2009

கல்வி நிவாரண செயற்றிட்டம். - புன்னியாமீன் -

இலங்கையில் யுத்த நிலமை காரணமாக இடம் பெயர்ந்து தற்போது வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக இலங்கையில் சிந்தனை வட்டம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் விடுத்;திருந்த பத்திரிகை அறிக்கை வருமாறு

வடக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்த சிந்தனைவட்டம் திட்டமிட்ட செயற்றிட்டங்களை வகுத்து விளம்பர நோக்கமின்றி உணர்வுபூர்வமாக செயற்படுத்தி வருகின்றது.

தற்போது செயற்படுத்தப்பட்டு முடிவுறும் கட்டத்திலுள்ள முதற்கட்ட செயற்றிட்டத்துக்கு லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்தினதும், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தினதும், லண்டன் அகிலன் பவுண்டேஷன் மற்றும் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புகளினதும், சில பரோபகாரிகளினதும் உதவிகள் பெறப்பட்டு சுமார் இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்: நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி வருகின்றது. தொடர்ந்து க.பொ.த (சாதாரண தரம்) மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்காக வேண்டிய திட்டமொன்றையும் வகுத்து வருகின்றது.

இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'பூஜ்ய கல்வி அலகை” எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இன்று அகதிகளாக நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மைக்கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதிமுகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பாராளுமன்றத்தில் வாய்மூலக் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர் எனத் தெரிவித்தார். 60ஆயிரம் மாணவர் எனும்போது நாளைய சமூகத்தை கட்டியெழுப்பக் கூடிய சக்திகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரிநிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இடம் பெயர்ந்துள்ள மாணவர்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளுள் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.

ஒன்று இடம்பெயர்ந்த மாணவர்களை அவதானிக்குமிடத்து, அவர்களில் அதிகளவிலான மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடருத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. எனவே மாணவர்களின் உள நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்புபடுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ளக்கூடிய சூழலொன்று இல்லாதிருப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம், இங்குள்ள பாடசாலைகளில் பெரும்பாலானவை முழுநேரப் பாடசாலைகளாக அன்றி பகுதிநேரப் பாடசாலைகளாகவே இயங்குகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நலன்புரிநிலையங்களிலுள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய ஒரு அவசியப்பாடு அனைவருக்கும் காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் இலவசப் பாடநூல்கள், சீருடைகள் போன்றனவும் சில அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களின் நலனைப் பேணும்முகமாக பல்வேறுபட்ட தொண்டர் நிறுவனங்களும் உதவிகளைச் செய்து வருகின்றன. ஆனால், இம்மாணவர்களின் கல்வி நிலையை பேணக்கூடிய வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளை நலன்புரி அமைப்புகள் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மாணவர்களின் தேவை குறித்த உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதுடன் தமது பணியினை அவை வரையறுத்துக் கொள்கின்றன.

மேற்குறிப்பிட்ட நிலைகளைக் கருத்திற்கொண்டு ஒரு செயற்றிட்டத்திற்கமைய சிந்தனைவட்டம் முதற் கட்டமாக தரம் 05 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்வி அபிவிருத்திற்காக வேண்டி திட்டமிட்ட செயற்பாடொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக அரசாங்க பரீட்சையொன்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டுமென்ற எண்ணத்திற்கமையவே முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை சிந்தனைவட்டம் தேர்ந்தெடுத்தது.

இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதேநேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையுமாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் 5000 ரூபாய் பெறுமதிமிக்க புலமைப்பரிசில் பணம் வழங்கும். அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிட்டுகின்றது.

தரம் 5ஐச் சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற அடிப்படையிலும் இப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் முதற் கட்டமாக தரம் 05ஐ எமது செயற்றிட்டத்துக்காக தேர்ந்தெடுத்தோம்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதியிட்ட அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும். இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் மிகவும் திறன்பட வழிநடத்துகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான அடிப்படை நிதியுதவியினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற்” இணையத்தளத்தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் “அகிலன் பவுண்டேஷன்” மற்றும் “லிட்டில் எய்ட்” நிறுவனம் ஆகியவற்றுடன் சில பரோபகாரிகளும் வழங்கினர்.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செயற்றிட்டத்துக்கு 7 இலட்சம் ரூபாய்களை “மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்” வழங்கியது. மீதித் தொகையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்தின் முயற்சியின் பிரகாரம் தேசம்நெற் இரண்டு லட்சம் ரூபாய்களையும், லண்டன் அகிலன் பவுண்டேஷன் மூவாயிரம் பவுண்களையும், லண்டன் லிட்டில் எய்ட் நிறுவனம் ஆயிரம் பவுண்களையும் பொறுப்பேற்றன. லண்டனைச் சேர்ந்த வேறும் சில பரோபகாரிகள் மீதமான ஆயிரம் பவுண்களையும் தர முன்வந்துள்ளனர். எனவே, மிகவும் ஒரு குறுகிய வட்;டத்திற்குள்ளே நிதியுதவி பெறப்பட்டு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தரம் 05 பாடத்திட்டத்திற்கு அமைய மாதிரி வினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக விநியோகித்தல் போன்ற சகல கருமங்களையும் சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றது.

சிந்தனைவட்டத்தின் இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.இதன் காரணமாக எம்மால் அனுப்பப்படும் மாதிரிவினாத்தாள்களும் வழிகாட்டிப் புத்தகங்களும் நேரடியாக கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாணவர்களை சென்றடைகின்றன. இவை வலயம் 0, வலயம் 1, வலயம் 2, வலயம் 3, வலயம் 4,வலயம் 5 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் மேலும் சுமதிபுரம், தரம்புரம், வீரபுரம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களிலுள்ள 07 பாடசாலையில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் நேரடியாக வழங்கப்படுகின்றன. எம்மால் வழங்கப்படும் மாதிரிவினாத்தாள்களை நலன்புரி நிலையங்களிலுள்ள ஆசிரியர்கள் கூடிய கரிசனை செலுத்தி மாணவர்களுக்கு வழங்கி வழிநடத்தி வருகின்றனர். சில பாடசாலைகளில் மாதிரிவினாத்தாள்கள் பரீட்சையாக நடத்தப்பட்டு புள்ளிகள் பதியப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிந்தனைவட்டம் ஆரம்ப கட்டமாக 1057 மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டி நூல்களையும் வழங்கியது. ஏப்ரல் மாதம் மத்தியில் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தையடுத்து நலன் புரிநிலையங்களுக்கு இடம்பெயர்ந்த மேலதிக 3800 மாணவர்களுக்கும் அடுத்த கட்டமாக இச்செயற்றிட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது மொத்தமாக 4872 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தரம் 05 மாணவர்களின் பரீட்சை இம்மாதம் 23ஆந் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சை முடிவடைந்த பின்பு க.பொ.த. (சா/தர) மாணவர்களுக்கான துரித மீட்டல் திட்டமொன்றினை செப்டம்பர் ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டு வருகின்றது.

இலங்கைத் தமிழன் கல்வியால் தலைநிமிர்ந்தவன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டே கல்வித்துறையில் இவர்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. கல்வித் துறையில் தமிழ் சமூகத்தினர் பெற்ற வெற்றிகள் சர்வதேச ரீதியில் தமிழினத்தின் ஒரு தனித்துவத்திற்கு சான்று பகன்று நிற்கின்றது என்பதை யாராலும் மறுப்பதற்கியலாது. அண்மைக்கால யுத்த சூழ்நிலை வட புலத்தைச் சேர்ந்த தமிழர்களின் கல்வியில் பாரிய பின்னடைவொன்றை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அறிக்கையொன்றில் “வட தமிழர்களின் கல்வி பதினைந்தாண்டுகளுக்கு பின்தள்ளப்பட்டு விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வார்த்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே, தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக போராடும் அதேநேரத்தில் தற்போதைய சமூகத்தின் கல்வி வீழ்ந்துவிடாமல் காக்க வேண்டியதும் கடமையாகவே உள்ளது. வடபுலத்து அகதிமுகாம்களில் கல்வி பயிலும் மாணவர்களைப் பொருத்தமட்டில் அவர்களின் கல்வி அபிவிருத்தி என்பதைவிட கற்றவற்றை மறந்துவிடாது சாதாரண நிலையில் பரீட்சைகளை எதிர்கொள்ளக்கூடிய வசதிகள், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது படித்த ஒவ்வொரு தமிழனின் கடமை என்று துணிந்து கூறலாம். அரசியல் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டபோதிலும்கூட, வட புலத்து மாணவர்களின் கல்வியில் கட்சி, இயக்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஒருமைப்பாடு காணப்பட வேண்டும். ஏனெனில், கல்வித்திட்டம் பொதுவானது. இதற்கான முயற்சிகள் செயல்திட்டங்கள் என்பன புத்திஜீவிகளின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சு கல்வித்திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து போலித்தனமாக அன்றி உணர்வுபூர்வமான முறையில் வகுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com