Thursday, August 13, 2009

அங்குலான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது.

அங்குலான பொலிஸ் காவல் நிலையத்திற்கு அருகாமையில் இரு இளைஞர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சண்டை மூண்டிருந்தது. சண்டையின் போது பொலிஸ் காவல் நிலையம் பொதுமக்களால் தாக்கியழிக்ப்பட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 3 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை புனைப் பெயர் கொண்டு அழைத்த இரு இளைஞர்கள் அங்குலான பொலிஸ் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டிருந்த அவ்விளைஞர்களின் உறவினர்கள் நேற்று இரவு பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களுடன் உரையாடி விட்டு திரும்பியும் உள்ளனர். ஆனால் இன்று காலை உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை பார்வையிட அனுமதி கோரியபோது அவ்வாறு எவரையும் நாம் கைது செய்யவில்லை என பொலிஸார் கைவிரித்துள்ளனர்.

சற்று நேரத்தில் அவ்விளைஞர்கள் இருவரதும் உடல்கள் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் அங்குலான ரயில் தண்டவாளம் அருகில் காணப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பொலிஸ் காவல் நிலையத்தை தாக்கி சேதமாக்கியுள்ளனர்.

பொலிஸார் இக்கொலையை செய்துள்ளதற்கான தாராளமான சாட்சிகள் உள்ள நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அங்கு கடமையில் இருந்த 6 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்திற்கு புதிய பொறுப்பதிகாரியுடன் 12 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment