Sunday, August 23, 2009

கறுப்புப் பணம் கணக்கு தேடி வராதீர்கள்!: சுவிஸ் வங்கிகள்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி யாரும் எங்களை அணுகாதீர்கள் என்று அந்நாட்டு வங்கிகளின் சங்கம் தெளிவுபடக் கூறிவிட்டது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டுமே பல லட்சம் கோடி இருக்கும் என்று சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூறப்பட்டது.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரங்களைத் தரத்தயார் என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் தெரிவித்தன. அத்துடன் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், இதர சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் கணக்காக இருந்தால் உடனே தரத்தயார் என்றும் கூறின.

ஆனால் தில்லிக்கு வந்துள்ள ஸ்விஸ் வங்கிகள் சங்கத்தைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் நேசனோ, யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்துகொண்டுவிடலாம் என்ற உரிமையை அரசு அளித்துவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. எனவே சுவிட்சர்லாந்து நாட்டில், சட்டவிரோதமாகப் பணத்தை யாராவது வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் வங்கி நிர்வாகிகளே அவர்களுடைய கணக்கைத் திறந்து காட்டுவார்கள் அப்படி எதுவும் இல்லாமல் வெறும் தகவல் அறியும் உரிமைக்காக யாராவது வங்கியை அணுகினால் ஒரு தகவலையும் பெற்றுவிட முடியாது என்று ஜேம்ஸ் நேசன் கூறியிருக்கிறார்.

நன்றி தினமணி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com