Wednesday, August 12, 2009

ஜே.வி.பி.அனுர மற்றும் முன்னாள் நீதியரசருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் அனுர திசாநாயக்கா ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் (10) இரவு கிருளபனை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றின் அறையொன்றுக்குள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நேற்று லக்பிம நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியுடன் தொடர்புடைய வகையிலேயே மேற்படி இருவருக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஷமிந்தி சபரமாது மற்றும் காஷ்யப்ப சபரமாது தம்பதியினரால் கிருளப்பனை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இல்லத்திலேயே அநுர திசாநாயக்காவுக்கும் சரத் என்.சில்வாவுக்கும் இடையில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று லங்கா ஈ நியூசுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த இல்லத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசார நிகழ்வில் இவ்விருவரும் அதிதிகளாகக் கலந்துகொண்ட போதே இந்த இரகசிய கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீ.எச்.டீ படிப்பை நிறைவு செய்துள்ள ஷமிந்தி சபரமாது தனது மேலதிக பட்டப்படிப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளார். இதனை முன்னிட்டும் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா குறித்த விருந்துபசார நிகழ்வுக்கு பிரதான அதிதியாக அழைப்பு விடுக்கப்பட்டார். இவ்வாறாக அழைப்பு விடுக்கப்பட்ட ஏனையவர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம், தயாசிறி ஜயசேகர, அரசாங்க தரப்பு சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்தனா, சீ.பீ.ரத்நாயக்க, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகரான சுனிமல் பெர்ணான்டோ, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமும் கம்பஹா மாவட்டத்துக்காள மேலதிக நீதிவானுமாகிய பியசேன ரணசிங்க, எங்கள் தேசிய முன்னணியின் செயலாளர் ருவன் பெர்டினென்டஸ், ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் சகோதரியொருவரும் கலந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கல சமரவீர ஆகியோருக்கும் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவ்விருவரும் அதில் கலந்துகொண்டிருக்கவில்லை. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கா வெகு நேரம் அங்கிருக்காது விரைவில் விடைபெற்றுச் சென்றுள்ளார்.

நன்றி லங்காஈநியூஸ்



No comments:

Post a Comment